தமிழ்நாட்டில் பாஜகவின் பருப்பு என்றைக்கும் வேகாது: உதயநிதி ஸ்டாலின்

உங்கள் வாக்குகள் உள்ளதா என்று நீங்களே பார்க்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
சென்னையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு பிறகு, தமிழ்நாட்டளவில் 97 லட்சம் வாக்காளர்களும், சென்னையில் மட்டும் சுமார் 14 லட்சம் வாக்காளர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களது வாக்குகள் நீக்கப்படாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு உதவ திமுக துணை நிற்கும்.
டெல்லியில் உட்கார்ந்து கொண்டு இவ்வளவு சூழ்ச்சி செய்து விட்டு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சொல்கிறார். பீகார் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம், அடுத்தது இலக்கு தமிழ்நாடுதான்" என்று. இந்த உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் அடிமை கூட்டம் வேண்டுமென்றால் பயப்படும், ஆனால் தமிழ்நாட்டு மக்களும் திமுகவும் என்றைக்கும் பயப்பட மாட்டோம்.
பீகார், மத்திய பிரதேசம் போன்ற வட மாநிங்களில் வேண்டுமென்றால் நீங்கள் ஜெயிக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் உங்கள் பருப்பு என்றைக்கும் வேகாது. எஸ்.ஐ.ஆர். அபாயம் குறித்து முதன்முதலில் பேசியவர் நம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். சிறுபான்மை, தலித், இஸ்லாமியர் வாக்குகளை நீக்கதான் எஸ்.ஐ.ஆர்.-ஐ கொண்டு வந்துள்ளனர். அதன்படியே தற்போது தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 97 லட்சம் வாக்குகளை நீக்கியுள்ளனர்.
அனைவரும் உங்கள் வாக்குகள் உள்ளதா என்று நீங்களே பார்க்க வேண்டும். இதை கோரிக்கையாக வைக்கிறேன். அப்படி உங்கள் வாக்கு இல்லை என்றால் மீண்டும் பதிவு செய்யுங்கள். இதை நாம் தான் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






