41 உயிர்களின் ரத்தக்கறை திமுக அரசின் கைகளில் இருந்து என்றும் அகலாது - நயினார் நாகேந்திரன்

கரூரில் மக்கள் துயரைப் போக்க விரைந்த மத்திய அரசைக் குறை கூற திமுகவினருக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

திமுகவின் திறனற்ற நிர்வாகத்தால் நேர்ந்த தவறை மறைக்க மத்திய அரசின் மீது வீண் பழிபோட்டு திசைதிருப்பப் பார்க்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே!

மேடை ஏறியதும், இயற்கை பேரிடர் ஏற்பட்டபோதெல்லாம் மத்திய நிதி மந்திரி வந்ததும் இல்லை, நிதி தந்ததுமில்லை என்று எந்தவொரு அடிப்படையுமின்றி வாய்கூசாது பொய் கூறும் முன் சிறிது வரலாற்றுப் பக்கங்களையும் புரட்டிப் பார்க்கலாமே! கஜா புயல், மிக்ஜாம் புயலால் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் எனப் பல்வேறு இயற்கைப் பேரிடர்களால் தமிழகம் அவதியுற்ற போதும் நமது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஓடோடி வந்தது தங்களுக்கு மறந்துவிட்டதா? நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை பேரிடர் நிதியாகத் தமிழகத்திற்கு சுமார் ரூ.13,000 கோடிக்கு மேல் மத்திய அரசு ஒதுக்கியதை ஏன் மறைக்கப் பார்க்கிறீர்கள்? மழையிலும், புயலிலும் தமிழக மக்களோடு என்றும் உறுதுணையாக இருக்கும் எங்களுக்கு யாரையும் உருட்டி மிரட்டி கூட்டணிக்கு வர வைக்கவோ, போலி நாடகங்களை அரங்கேற்ற வேண்டிய அவசியமோ இல்லை.

ஒரே இரவில் கரூருக்கு விரைந்த நீங்கள், உங்கள் ஆட்சிப் பொறுப்பில் கண்ணுக்கெட்டும் தூரத்தில் இருக்கும் கள்ளக்குறிச்சிக்கும், வேங்கைவயலுக்கும், சிவகங்கைக்கும் இன்று வரை செல்லாதது ஏன்? அங்குள்ள மக்களின் கண்ணீரை விட கரூர் செல்வதனால் ஏற்படும் அரசியல் ஆதாயம் தான் தங்களுக்குப் பெரிதாகிவிட்டதல்லவா? ஓட்டுக்காக கரூரில் போட்டோஷூட் நாடகமாடும் திமுகவினருக்குக் கரூரில் மக்கள் துயரைப் போக்க விரைந்த மத்திய அரசைக் குறை கூற எந்தத் தகுதியும் இல்லை!

எவ்வளவு போலிக் குற்றச்சாட்டுகளை அடுக்கினாலும், முன்னேற்பாடுகளும் முறையான திட்டமிடலும் இல்லாமல் கரூரில் 41 அப்பாவி உயிர்களைப் பலியிட்டதால் நேர்ந்த ரத்தக்கறை திமுக அரசின் கைகளில் இருந்து என்றும் அகலாது! மக்களை வதைத்து மீண்டும் ஆட்சி ஏறும் தங்கள் பகல் கனவும் என்றும் பலிக்காது! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com