குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சியின் கொள்ளுப்பேரன்

தென்காசி மாவட்டத்திற்கு 21-ம் தேதி வரை ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வஉசியின் கொள்ளுப்பேரன்
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் 2 நாட்களுக்கு முன்பு பழைய குற்றால அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது. அருவியில் குளித்துக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறினர்.

இருப்பினும், வெள்ளப்பெருக்கில் அஸ்வின் என்ற சிறுவன் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். தொடர்ந்து, கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்திற்கு வரும் 21-ம் தேதி வரை மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குற்றாலம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் குற்றாலம் பேரருவி, பழையகுற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் பெரும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே அருவிகள் மற்றும் அணைப் பகுதிகள் மறுஉத்தரவு வரும் பொதுமக்கள் குளிக்கத் தடைவிதித்து தென்காசி மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல்கிஷோர் உத்தரவிட்டார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பழைய குற்றால அருவியில் உயிரிழந்த சிறுவன் அஸ்வின், சுதந்திரப் போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழனுமான வ.உ.சியின் கொள்ளுப்பேரன் என தகவல் வெளியாகியுள்ளது.

மகன் ஆசைப்பட்டார் என்பதற்காக தென்காசி சென்றிருந்தபோது வெள்ளத்தில் மகனை பறிகொடுத்ததாக பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். சிறுவன் அஸ்வின் இறந்த சோகத்தில் அவரது குடும்பத்தினர் இருப்பதால் இதுகுறித்து பேச அவர்கள் மறுத்துவிட்டனர். மேலும் வீட்டுக்கு வேறு யாரும் வர வேண்டாம் எனவு அவர்கள் கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கோடை விடுமுறையையொட்டி, தென்காசி மேலகரத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com