ராஜாவைத் தாலாட்டும் தென்றல் - நம் பாராட்டு விழா ; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்


ராஜாவைத் தாலாட்டும் தென்றல் - நம் பாராட்டு விழா ; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
x

இளையராஜாவின் பொன்விழா கொண்டாட்டம், தமிழக அரசின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 13-ந் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

சென்னை,

இசை உலகில் ஏராளமான சாதனைகள் படைத்த இளையராஜா, லண்டனில் தனது கனவு படைப்பான சிம்பொனியை கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி நள்ளிரவு அரங்கேற்றி உலக சாதனை படைத்தார்.

‘வேலியண்ட்' என்று பெயரிடப்பட்ட இந்த சிம்பொனியை புகழ்பெற்ற லண்டன் ஈவண்டின் அப்பல்லோ அரங்கத்தில் 80 இசைக்கலைஞர்களுடன் 90 நிமிடங்கள் வாசித்தார். சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்ததுடன், பெரும் இசை ஜாம்பவான்களான மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி வரிசையில் தனது பெயரையும் சாதனை பட்டியலில் இணைத்தார்.

சிம்பொனி இசைத்து லண்டனில் இருந்து சென்னை திரும்பிய இளையராஜா, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் சென்று சந்தித்தார். அப்போது இளையராஜாவுக்கு சால்வை அணிவித்து லண்டன் சிம்பொனியை சிறப்பாக அரங்கேற்றியதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘லண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்து திரும்பியுள்ள இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு கால திரையிசை பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவு எடுத்துள்ளோம். ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி, இளையராஜா பொன்விழா கொண்டாட்ட விழா, தமிழக அரசு சார்பில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு இந்த விழா நடக்கிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த பாராட்டு விழா நடக்கிறது. இதில் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றுகிறார். அதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையுரை ஆற்றுகிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி திரை பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள். இதில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், திரைக்கலைஞர்கள் உள்பட பலரும் பங்கேற்கிறார்கள். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நன்றி கூறுகிறார்.

1976-ம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி' திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, தமிழ் சினிமாவில் இசை ராஜ்ஜியமே நடத்தி வருகிறார். லண்டனில் சிம்பொனி இசைத்து சாதனையும் படைத்தார். அவருக்கு தமிழக அரசு பாராட்டு விழா எடுப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜாவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில், இது இசையின் அரசனுக்கு மட்டுமல்ல,அவரை வியக்கும் உலகில் உள்ள அத்தனை இசை ரசிகர்களுக்குமான பாராட்டு விழா என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில்,

“ராஜாவைத் தாலாட்டும் தென்றல்” - நம் பாராட்டு விழா! இது இசையின் அரசனுக்கு மட்டுமல்ல; அவரை வியக்கும் உலகில் உள்ள அத்தனை இசை இரசிகர்களுக்குமான பாராட்டு விழா என பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story