விஷம் குடித்த அண்ணன்.. காப்பாற்ற முயன்ற தம்பி.. அடுத்து நடந்த கொடூரம்


விஷம் குடித்த அண்ணன்.. காப்பாற்ற முயன்ற தம்பி.. அடுத்து நடந்த கொடூரம்
x

கோப்புப்படம்

குடும்ப தகராறில் விஷம் குடித்த அண்ணன், மருத்துவமனைக்கு செல்ல மறுத்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்.

கோயம்புத்தூர்


கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை காளியாபுரம் பகுதியில் சோமநாதபுரத்தை சேர்ந்தவர் செந்தில் என்ற திருமூர்த்தி (வயது 45). இவரது அண்ணன் ரகுபதிராம் (52). இவர்கள் 2 பேரும் தேங்காய் பறிக்கும் தொழிலாளர்கள். ரகுபதிராமின் மனைவி வெண்ணிலா(48). இவர் சமையல் வேலைக்கு சென்று வந்துள்ளார். ஆனால் வெண்ணிலா வேலைக்கு செல்வது ரகுபதிராமுக்கு பிடிக்கவில்லை.

இதனால் அவர், வெண்ணிலாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார். இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து வேலைக்கு சென்றால் விஷம் குடித்து இறந்து விடுவதாக ரகுபதிராம், வெண்ணிலாவிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் நேற்று முன்தினம் மாலை வெண்ணிலா சமையல் வேலைக்கு சென்றுள்ளார்.

இதையறிந்த ரகுபதிராம் வெண்ணிலாவை செல்போனில் தொடர்பு கொண்டு, தான் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த வெண்ணிலா, உடனே செல்போனில் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவரது உறவினர்கள் மற்றும் ரகுபதிராமின் தம்பி செந்தில் ஆகியோர் ரகுபதிராம் வீட்டுக்கு சென்று, அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் ரகுபதிராம் மருத்துவமனைக்கு வர மறுத்து அடம்பிடித்தார்.

இதுதொடர்பாக ரகுபதி ராமுக்கும், செந்திலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ரகுபதிராம், தம்பி என்றும் பாராமல் தேங்காய் வெட்டும் அரிவாளால் செந்திலை கழுத்தில் வெட்டினார். இதில் செந்தில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனை சற்றும் எதிர்பாராத உறவினர்கள் உடனே செந்திலை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

இதேநேரத்தில் விஷம் குடித்த ரகுபதிராமும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆனைமலை போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் பாதுகாப்புடன் ரகுபதிராமுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் குணமானதும், கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story