முதியவரின் கையை முறித்த வாலிபர் மீது வழக்கு

முதியவரின் கையை முறித்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதியவரின் கையை முறித்த வாலிபர் மீது வழக்கு
Published on

தா.பழூர் 

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கீழசிந்தமணி காலனி தெருவை சேர்ந்தவர் கைலாசம் மகன் சொக்கலிங்கம்(வயது 70). இவரது பேத்தி பவானி என்பவரை அதே பகுதியை சேர்ந்த தங்கையன் மகன் வெற்றி(25) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். வெற்றி தினமும் மது அருந்திவிட்டு பவானியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பவானி தனது தாத்தா சொக்கலிங்கம் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த வெற்றி பவானியை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். சொக்கலிங்கம் காலையில் வந்து அழைத்துச் செல்ல அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த வெற்றி, சொக்கலிங்கத்தை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சொக்கலிங்கத்திற்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து சொக்கலிங்கம் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com