

சென்னை,
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 95.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என அக்கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுபற்றிய திமுகவின் மனு மீது நேற்று இரவு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷின் வீட்டில் வைத்து விசாரணை நடைபெற்றது.
இந்த மனு மீது பதிலளிக்கும்படி இன்று காலை 8 மணிக்கு தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் தி.மு.க. தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் தொடங்கியது. அதில், காந்தி மண்டபம் என்பது காங்கிரஸ் தலைவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம். காங்கிரசுக்கும், திராவிட கொள்கைகளுக்கும் வேற்றுமை உள்ளது. அதனால் காந்தி மண்டபம் வேண்டாம்.
ராஜாஜி, காமராஜர் கொள்கை வேறு, கலைஞரின் கொள்கை வேறு. மாற்று கொள்கை கொண்டவர்களிடையே கலைஞரை அடக்கம் செய்ய முடியாது.
அண்ணா நினைவிடம் மயான பகுதியாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 22.9.1988ல் அண்ணா நினைவிடம் சமாதி பகுதியாக அறிவிக்கப்பட்டது.
அண்ணாவின் சித்தாந்தத்தினை பின்பற்றிய நிலையில் எம்.ஜி.ஆர். மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டார்.
அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றியவர் தி.மு.க. தலைவர் கலைஞர். அண்ணா நினைவிடத்தில் கலைஞர் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றே கோருகிறோம்.
உரிய மரியாதையுடன் கலைஞரின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் கட்டிடங்கள் எழுப்பவே அனுமதி பெற வேண்டும் என வாதிட்டு வருகின்றனர்.