கிராம உதவியாளர் முத்துசாமியை காலில் விழ வைத்த விவகாரம்; கோபால்சாமி மீது குற்றவியல் நடவடிக்கை - கலெக்டர் சமீரன் உத்தரவு

கிராம உதவியாளர் முத்துசாமியை காலில் விழ வைத்த விவகாரத்தில் கோபால்சாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
கிராம உதவியாளர் முத்துசாமியை காலில் விழ வைத்த விவகாரம்; கோபால்சாமி மீது குற்றவியல் நடவடிக்கை - கலெக்டர் சமீரன் உத்தரவு
Published on

கோவை,

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒட்டர்பாளையத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக அந்த பகுதியை சேர்ந்த முத்துசாமி (வயது 56) வேலை பார்த்து வருகிறார். அன்னூர் அருகே உள்ள கோபிராசிபுரத்தை சேர்ந்த கோபால்சாமி என்பவர் தனது சொத்து விவரம் குறித்த ஆவண சரிபார்ப்புக்காக நேற்று முன்தினம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது அங்கு கிராம நிர்வாக அலுவலர் கலைசெல்வி, உதவியாளர் முத்துசாமி ஆகியோர் பணியில் இருந்தனர். போதிய ஆவணங்கள் இல்லை, இன்னும் கூடுதல் ஆவணங்களை கொண்டு வரும்படி அவரிடம் கலைசெல்வி கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கோபால்சாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டு கலைசெல்வியை ஒருமையில் பேசியதாக தெரிகிறது. இதனை முத்துசாமி கண்டித்தார்.

இதில் வாக்குவாதம் முற்றி உதவியாளர் முத்துசாமி, கோபால்சாமியை தள்ளியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கோபால்சாமி உன்னை வேலையில் இருந்து தூக்கி விட முடியும். இந்த ஊரிலும் நீ இருக்க முடியாது என்று மிரட்டும் வகையில் பேசியுள்ளார். மேலும் தன்னிடம் மன்னிப்பு கேட்கும்படி முத்துசாமியை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் அச்சம் அடைந்த முத்துசாமி வேறுவழியின்றி கோபால்சாமி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். உடனே கலைசெல்வியும், அங்கிருந்த நபர்களும் முத்துசாமியின் கைகளை பிடித்து தூக்க முயன்றனர். ஆனால் முத்துசாமி எழுந்து மீண்டும் கோபால்சாமி காலில் விழுந்து மன்னிப்பு கோரினார்.

கிராம உதவியாளர் முத்துசாமி, ஒருவரின் காலில் விழும் காட்சிகளை சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோ வைரலாக சமூக வலைத்தளங்களில் நேற்று பரவியது.

இந்த வீடியோ மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர் மாவட்ட வருவாய் அதிகாரி, போலீஸ் சூப்பிரண்டு இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது.

இந்நிலையில், கிராம உதவியாளர் முத்துசாமியை, கோபால்சாமி தன் காலில் விழ வைத்த விவகாரத்தில் கோபால்சாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். முத்துசாமியை, கோபால்சாமி தன் காலில் விழச் சொன்னது விசாரணை குழு அறிக்கையில் உறுதியாகியுள்ள நிலையில் மாவட்ட கலெக்டர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com