உரிய நேரத்தில் அரசு நடவடிக்கை எடுக்காததே கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு காரணம்- எடப்பாடி பழனிச்சாமி

திமுக அரசு உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காததே இன்றைய அசாதாரண சூழலுக்கு காரணம் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தெரிவித்ததாவது;

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகில் தனியார் பள்ளியில் தங்கி படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்ததாக ஊடகங்களில் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளி வந்தன. ஆனால் மாணவியின் தாயார் தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மாணவியின் மரணம் குறித்து நீதி கேட்டு பெற்றோர்கள் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தி வந்தார்கள். பள்ளி மாணவி மரண விவகாரத்தில் அரசாங்கம், உளவுத்துறை, காவல்துறை செயலிழந்து விட்டது. உளவுத்துறை தகவல் மூலம் நடவடிக்கை எடுத்திருக்கலாம். பாதிக்கப்பட்டிருக்கின்ற பெற்றோரை சந்தித்து இந்த அரசு ஆறுதல் சொல்லியிருக்க வேண்டும். மூன்று நாட்கள் காலம் கடத்தியது.

மாணவி மரணத்திற்கு நீதி கிடைக்காத நிலையில், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் கொதித்து எழுந்து போராட்டம் நடத்தினர். திமுக அரசு உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காததே இன்றைய அசாதாரண சூழலுக்கு காரணம். பள்ளி தாக்குதல் சம்பவத்திற்கு அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். இதேபோல் முன்னாள் மாணவன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து உள்ளது. தமிழகத்தில் மாணவிகள்,பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக எப்போதும் சொன்னதை செய்தது கிடையாது. தேர்தலில் வெற்றி பெற்றவுடன் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டது.

ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்துச் செய்யப்படும் என்று சொல்லி விட்டு இதுவரை திமுக அரசு எதுவும் செய்யவில்லை. உயிர்கள் பலியானதுதான் மிச்சம். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதால் ஒபிஎஸ் விவகாரம் குறித்து பேசுவது சரியானது அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com