

சென்னை,
தமிழக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
கர்நாடக அரசின் மேகேதாட்டு அணை விரிவாக்க அறிக்கையை விரைவுபடுத்தி மத்திய அமைச்சரவை ஒப்புதலை பெற முயற்சிப்பது, தமிழ்நாட்டின் நீர்வழங்கல் உரிமைகளுக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் நேரடியான தாக்குதலாகும்.
உச்சநீதிமன்றமும் காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளன ,தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் மீது எந்த புதிய அணையும் கட்ட முடியாது. இருந்தபோதிலும், கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் தொடர்ந்து தூண்டுதல் நிறைந்த கருத்துகளை வெளியிட்டு, சட்ட உத்தரவுகளையும் கூட்டாட்சி கொள்கைகளையும் புறக்கணித்து வருகிறார்.
மத்திய அரசு இந்த முன்மொழிவை உடனடியாக நிராகரிக்க வேண்டும். கர்நாடகத்தின் பாஜக அழுத்தம் தமிழ்நாட்டுக்கு எதிரான பாகுபாடாக மாறக்கூடாது.
தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகள் அரசியல் வசதிக்காக பலிகொடுக்கப்பட முடியாது.
காவிரி ஒரு அரசியல் ஆயுதம் அல்ல. அது தமிழ்நாட்டில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் உயிர்நாடியாகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது.