

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கல்லணையில் தற்போது காவிரி நீர் ஆர்ப்பரித்து செல்வதால், அதனை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கரிகால சோழனால் கட்டப்பட்ட கல்லணை, காலத்தை கடந்து இன்றளவும் கம்பீரமாக காட்சியளித்து வருகிறது. தமிழக அரசால் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டுள்ள கல்லணை, டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசனத்துக்கு காவிரி நீரை பகிர்ந்தளிப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக நீர்வரத்து இன்றி வறண்டு காணப்பட்ட கல்லணைக்கு, மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் வந்து சேர்ந்துள்ளது. இதனால் அணையில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் மற்றும் கல்லணை கால்வாய் ஆகியவற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரை காண தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
குடும்பத்துடன் வந்துள்ள சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளித்தும், அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் அழகை ரசித்தும், செல்ஃபி எடுத்தும் உற்சாகமாக பொழுதை கழித்து வருகின்றனர்.