கிரானைட் முறைகேடு பற்றி சி.பி.ஐ. விசாரிக்க தேவை இல்லை; ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு

கிரானைட் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க தேவையில்லை என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
கிரானைட் முறைகேடு பற்றி சி.பி.ஐ. விசாரிக்க தேவை இல்லை; ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு
Published on

சென்னை,

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்படி, சகாயம் விசாரணை நடத்தி ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கிரானைட் முறைகேடுகள் நடத்திருப்பதாகவும், கிரானைட் முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும், அறிக்கை தாக்கல் செய்தார்.

சகாயம் அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல்வேறு விஷயங்களுக்கு மறுப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதில் கூறி இருப்பதாவது:

சகாயம் குழுவை ஐகோர்ட்டு நியமிக்கும் முன்பே தமிழக அரசு மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொண்டது.

சகாயம் அளித்த 212 பரிந்துரைகளில் 131 பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. 67 சதவீத பரிந்துரைகள் சட்டத்துக்கு அப்பாற்பட்டு இருப்பதால் அந்த பரிந்துரைகளை நிராகரித்துள்ளோம்.

கிரானைட் முறைகேடு தொடர்பாக தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட கிரானைட் அதிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதி பெறாமல் எடுக்கப்பட்ட கிரானைட் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற சகாயம் அளித்துள்ள பரிந்துரைக்கு எந்த நியாயமான காரணமும் இல்லை. எனவே, சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை.

கிரானைட் கற்களை மதிப்பீடு செய்ததில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. சகாயம் குழு கிரானைட் கற்களுக்கு அதிக விலையை நிர்ணயித்துள்ளது. முறைகேட்டுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com