

சென்னை,
சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. நீலகிரி மலை மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டால் மக்களை மீட்க ஹெலிகாப்டர் தயார் நிலையில் உள்ளது. மக்கள் எண்ணங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். மக்கள் விரும்பிய சிறந்த ஆட்சியை தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தந்து இருக்கிறார்.
முதல்-அமைச்சரை பொறுத்தவரைக்கும் செயல்பாடுதான் முக்கியமாக நினைக்கிறார். நான் சொன்னதை செய்கிறோமா? முடிக்கப்பட்டு இருக்கிறதா?. மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்களா என்பதை தான் பார்க்கிறார். பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதை காட்டிலும் செயல்வடிவில் அவர்களது திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. சிறந்த ஆட்சியை தர துறை வாரியாக முதல்-அமைச்சர் ஆய்வு செய்து வருகிறார்.
பேரிடர் மேலாண்மைக்காக ரூ.1,000 கோடி நிதி தேவை என மத்திய அரசிடம் கேட்டோம்; அந்த நிதியை மத்திய அரசு வழங்கிவிட்டது; அதில் எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை; நாம் கேட்கின்றபோது மத்திய அரசு, நமக்கு வழங்கவேண்டிய நிதியை முன்னெச்சரிக்கையாக வழங்கியுள்ளது.
சாதி சான்றிதழ், ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை ஆன்லைனில் விண்ணப்பித்தால் 5 நாட்களுக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பத்திரப்பதிவு துறையில் உள்ள தேக்கங்களை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகில் குறைவாக மழை இருக்கிறது; குறைந்த அளவுதான் மேட்டூருக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மாரிதாஸ் என்ன விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்று எனக்கு சட்ட ரீதியாக தெரியவில்லை. பத்திரிகை சுதந்திரம் என்பது முழுமையாக சுதந்திரம் வேண்டும். அது எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னால், மக்கள் வளர்ச்சி பணியில் இருக்க வேண்டும். தனிப்பட்ட விமர்சனங்கள் இல்லாமல் மக்கள் வளர்ச்சி பணிகள் எப்படி இருக்க வேண்டும் என்று பத்திரிகைகள் சொல்லும் போது பத்திரிகை சுதந்திரம் மட்டுமல்ல, நாடே வளர்ச்சி அடையும்.
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக வெளியேறி இருக்கிறது. எங்கள் கொள்கை முடிவு என்ன என்பதை முதல்-அமைச்சர் விஜய் தெரிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.