மத்திய அரசு, பெண்களுக்கான அரசாக விளங்கி வருகிறது

மத்திய அரசு பெண்களுக்கான அரசாக விளங்கி வருகிறது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
மத்திய அரசு, பெண்களுக்கான அரசாக விளங்கி வருகிறது
Published on

மத்திய அரசு பெண்களுக்கான அரசாக விளங்கி வருகிறது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

மாணவிகளுடன் கலந்துரையாடல்

கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் 60-வது ஆண்டு வைர விழா நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். பெண்கள் நாட்டின் எதிர்காலம் என்ற தலைப்பில் அவர் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். தொடர்ந்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

எனக்கு நிதி மந்திரியாக இருப்பது நெருக்கடி இல்லை. அனைத்தையும் சவால்களாக எடுத்துக் கொள்கிறேன். மந்திரி ஆவதால் முன்னேற்றம் என்பது அல்ல. என்னை முன்னோக்கி இவ்வளவு தூரம் கொண்டு வந்துவிட்டாய் கடவுளே என நம்பிக்கை வைப்பேன், மேலும் நமது முயற்சியும் வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு மையம்

பெண்கள் மீதான சிந்தனை நம் குடும்பங்களில் இருந்து மாற வேண்டும். பெண்களுக்கு ஏதும் பிரச்சினை என்றால் அனைவரும் முன் வர வேண்டும், எனக்கு என்ன என்று விலகி செல்லாமல் 10 பேர் சேர்ந்தாவது கேள்வி கேட்டு, காவல்துறைக்காவது தகவலை கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு மையம் அமைய வேண்டும் என்பது எனது விருப்பம். ஆனால் டெல்லியில் இருந்து நான் திணிக்க முடியாது.

வருமான வரி சோதனை

தற்போது வரி ஏய்ப்பு அதிகளவில் நடக்கிறது. அதுபோன்ற நேரங்களில் தகவல் தொழில்நுட்பம் முன்னேற்றம் உதவியாக உள்ளது. இப்போதெல்லாம் ஓரே நேரத்தில் 30 இடங்களில் சோதனை நடக்கின்றது என்றால், அதற்கு ஏ ஒன் தகவல் தொழில்நுட்பம்தான் காரணம். ஒரு இடத்தை தொட்டால் அது தொடர்பான எல்லா இடங்களையும் அது காட்டிக்கொடுத்து விடுகின்றது. அதனால் அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது. இதற்கு அரசியல் காரணம் எல்லாம் கிடையாது.

நம் நாட்டில் பலருக்கு கிரிப்டோ கரன்சி மீது பெரும் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதனை தடைசெய்ய வேண்டுமா, முறைபடுத்த வேண்டுமா என்ற குழப்பம் உள்ளது. அது தொடர்பான விவாதங்கள் நடந்து கொண்டு இருக்கின்றது.

பெண்களுக்கான அரசு

மத்திய அரசு பெண்களை மையப்படுத்தும் அரசாக இல்லாமல், பெண்களுக்கான அரசாக உள்ளது. பெண்களுக்கான சேமிப்பு திட்டம், மானிய விலையில் கியாஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

செல்போன் செல்போனாக இருந்தால் நன்றாக இருக்கும், ஆனால் செல்போன் மோகம் அதிகரித்து விட்டது. மனிதர்களுடன் பேசுங்கள், தகவலை பகிருங்கள். 2 மணி நேரமாவது செல்போனை ஒதுக்கி மனிதர்களுடன் நேரடியாக உரையாடுங்கள். அது தான் நம்மை வளர்க்கும்.

இவ்வாறு அவர்கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., கல்லூரி நிர்வாக இயக்குனர் நந்தினி ரெங்கசாமி, செயலாளர் யசோதா, முதல்வர் மீனா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com