

சென்னை,
தமிழக கவர்னராக செயல்பட்டு வந்த ஆர்.என்.ரவிக்கும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ஆர்.என்.ரவி மாற்றப்பட்டு, மேற்கு வங்க கவர்னராக நியமிக்கப்பட்டார்.
அதே சமயம் தமிழ்நாட்டுக்கு மற்றொரு கவர்னர் நியமிக்கப்பட நிலையில், கேரள கவர்னர் அர்லேகருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர் கேரளம் மற்றும் தமிழக கவர்னராக செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்றபோது முதல்-அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு கவர்னர் அர்லேகர் பதவி பிரமானம் செய்து வைத்தார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு புதிய கவர்னரை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன் உத்தர பிரதேசம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கும் புதிய கவர்னர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். உத்தர பிரதேச கவர்னராக குஜராத் முன்னாள் முதல்-மந்திரி ஆனந்தி பென் பட்டேல் செயல்பட்டு வருகிறார். அவர் நியமிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகிவிட்டன.
உத்தர பிரதேசத்தில் அடுத்து சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால், அதனை கருத்தில் கொண்டு அங்கு புதிய கவர்னரை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அதே போல் கர்நாடக கவர்னர் தாவத் சந்த் கெலாட் நியமிக்கப்பட்டும் 7 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், வயது மூப்பு காரணமாக அவரையும் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஆகவே, இந்த மாநிலங்களுடன் சேர்த்து தமிழ்நாட்டிற்கும் புதிய கவர்னரை நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.