

சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும், தொகுதி மறுவரையறை செய்வதற்குமான திருத்த மசோதாக்களுக்கு மத்திய கேபினட் ஏப்ரல் 8-ம் தேதி ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதாவை சட்டமாக்க ஏப்ரல் 16-ம் தேதி முதல் ஏப்ரல் 18-ம் தேதி வரை சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது.
பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் 33% பெண்கள் இடஒதுக்கீட்டிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான ஆதரவு உள்ளது. ஆனால், பெண்கள் இடஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையோடு கட்டாயமாக இணைக்கும் மத்திய அரசின் நிலைப்பாடு, பெண்கள் உரிமையை ஒரு அரசியல் மூடுபனியாக பயன்படுத்தும் முயற்சி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயற்குழு குற்றம் சாட்டுகிறது. இந்த நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டுமென்று வலியுறுத்துகிறது.
தொகுதி மறுவரையறை என்பது அரசியலமைப்பின் 81, 82 மற்றும் 170 பிரிவுகளின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள ஜனநாயக செயல்முறையாகும். புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாமல், 2011 கணக்கெடுப்பு தரவின் அடிப்படையில் அவசரமாக செயல்படுவது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் போன்ற மக்கள் தொகை கட்டுப்பாட்டை முறையாக செயல்படுத்தி வெற்றிகண்ட தெற்கு மாநிலங்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.
84-வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தின்படி, 2026-ம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை என்பது நடைபெற வேண்டும். மத்திய அரசின் இந்த முயற்சி சட்ட விரோதமானது. மாநிலங்களுக்கிடையேயான சமத்துவக் கோட்பாட்டை பாதிக்கிறது. மேலும் இது கூட்டாட்சி அமைப்பை தகர்க்கும் முயற்சியாகும். இதனால் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் முன்னேற்றம் கண்டுள்ள, கல்வி, சுகாதாரம், சமூக முன்னேற்றத்தில் முன்னிலை வகிக்கின்ற தென் மாநிலங்கள் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்கும் அபாயத்தில் தள்ளப்படுகின்றன.
ஐந்து மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் நடைபெறும் இந்த சூழலில் இத்தகைய அவசர நடவடிக்கை அரசியல் லாப நோக்கத்துடன் செய்யப்படுகிறது. பாஜக பெண்கள் இடஒதுக்கீட்டை ஒரு அரசியல் ஆதாயத்திற்காக முன்னெடுத்திருக்கிறது.
தொகுதி மறுவரையறை கூட்டாட்சி சமநிலையை பாதிக்கக் கூடாது. அனைத்து மாநிலங்களுடனும் ஆலோசனை நடத்தப்பட வேண்டும். மக்கள் தொகை கட்டுப்பாட்டில் முன்னேற்றம் கண்ட மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது.
2026-ம் ஆண்டு புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகே தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட வேண்டும். மக்கள் தொகை கட்டுப்பாட்டில் முன்னேற்றம் கண்ட மாநிலங்கள் பிரதிநிதித்துவ இழப்பை சந்திக்காத வகையில் பாதுகாப்பு வழங்க வேண்டும். சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த உடன் அனைத்து கட்சிகளுடனான ஆலோசனை கூட்டத்தை நடத்தி, மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தில் இது முழுமையாக விவாதிக்கப்பட வேண்டும்.
பெண்கள் இடஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையிலிருந்து பிரித்து உடனடியாக அமல்படுத்த வேண்டும். இந்திய ஜனநாயகம் என்பது வெறும் எண் கணக்கீடு அல்ல; அது கூட்டாட்சி சமநிலை, சமூக நீதி, அரசியலமைப்பு சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயகத்தின் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை அவசரமாக திணிக்க முயல்வது ஏற்க முடியாதது. இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயற்குழு கண்டிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.