‘உத்தரகாண்ட் பேரிடரில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்' - மு.க.ஸ்டாலின் கோரிக்கை

உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
‘உத்தரகாண்ட் பேரிடரில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்' - மு.க.ஸ்டாலின் கோரிக்கை
Published on

சென்னை,

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், பனியானது உருகி நீராக பெருக்கெடுத்து அருகேயுள்ள தவுளிகங்கா ஆற்றில் கலந்தது. உடனடியாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்மட்டம் அதிகரித்தது.

இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள தபோவன் என்ற பகுதியில் ரெய்னி கிராமத்தில் தேசிய அனல்மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் அங்குள்ள தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர். ஏறக்குறைய 100 முதல் 150 பேர் பலியாகி இருக்க கூடும் என அம்மாநில தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் அச்சம் தெரிவித்துள்ளார்.

நந்திதேவி பனிக்குன்று உடைந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதென கூறப்படுகிறது. ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. தபோவன் அணையில் சிக்கியிருந்த 16 பேரை போலீசார் மீட்டு பாதுகாப்பு பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுவரை 9 பேர்களின் உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டு உள்ளன.

தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, முதல் மந்திரி ராவத்திடம் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவரிடம், மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்து உள்ளார்.

உத்தரகாண்டில் ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கு சம்பவம் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உருகி, அதன் காரணமாக உருவான வெள்ளம் குறித்து அறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். பேரிடரில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் விரைந்து மீளவேண்டும் என விழைகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com