சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் - டிடிவி தினகரன்

தமிழகத்தில் காலாவதியான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

ஏழை, எளிய மக்களின் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றும் சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தில் விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையிலான சுங்கக் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள சுமார் 40 சுங்கச்சாவடிகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீதமுள்ள 38 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தையும் உயர்த்தியிருக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது உயர்ந்திருக்கும் இந்த சுங்கக் கட்டணம் ஏழை, எளிய மக்களின் மீதான பொருளாதாரச் சுமையை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி மக்கள் ஒருபுறம் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்தப்படும் சுங்கக் கட்டணத்தால் சரக்கு மற்றும் வாடகை வாகனங்களின் கட்டணங்கள் உயர்வதோடு, பேருந்துக் கட்டணங்கள் உயர்வதற்கான அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, இன்று முதல் அமலுக்கு வந்திருக்கும் சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, தமிழகத்தில் காலாவதியான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com