தமிழகத்திற்கான புயல் நிவாரண நிதியை மத்திய அரசு விரைவாக வழங்க வேண்டும் - சட்டசபையில் கவர்னர் வலியுறுத்தல்

புயல் நிவாரணத்தை மத்திய அரசு விரைவாக வழங்க வேண்டும் என்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார். சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று பேசியதாவது:-
தமிழகத்திற்கான புயல் நிவாரண நிதியை மத்திய அரசு விரைவாக வழங்க வேண்டும் - சட்டசபையில் கவர்னர் வலியுறுத்தல்
Published on

சென்னை,

கொரோனா பெருந்தொற்று நோயை எதிர்கொள்வதற்கு அனைத்து அரசு எந்திரங்களையும் திறம்பட ஒருங்கிணைத்த பெருமையும், புகழும் முதல்-அமைச்சரையே சாரும். உரிய நேரத்தில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டன.

பெருந்தொற்று நோயின் பரவலை தடுப்பதற்கு, 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்திலும், போதிய அளவில் அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு உறுதிசெய்யப்பட்டது. பின்னர், தேவைக்கு ஏற்ப, படிப்படியாக தளர்வுகள் அனுமதிக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கு, முதல்-அமைச்சர், அனைத்து அமைச்சர்கள், அரசு எந்திரம், குறிப்பாக சுகாதாரம், வருவாய், காவல், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஏனைய துறைகளின் முன்களப் பணியாளர்கள் இணைந்து ஓர் அணியாக அயராது உழைத்துள்ளதை நான் மனமார பாராட்டுகிறேன்.

தொற்று நோய்க்காலத்தின் போதே, வரலாற்று சாதனையாக, 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் வாயிலாக, ஒரு லட்சத்து 721 நபர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய வகையில் ரூ.60,674 கோடி மதிப்பிலான முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில், கேர் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்திய அளவில் முதலீட்டுத் திட்டங்களில் அதிக பங்கைப் பெற்று, அதாவது 16 சதவீதம் பெற்று, முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

கொரோனா பெருந்தொற்று நோய்க்காலத்தின் முதல் 2 காலாண்டுகளில், முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது என்று பிராஜெக்ட்ஸ் டுடே நிறுவனமும் குறிப்பிட்டுள்ளது.

7.5 சதவீத ஒதுக்கீடு மூலம், அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மற்றும் சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை, மருத்துவ கல்வி பயில்வதற்கு பெரிதும் ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் தொலைதூர கிராமப்புறங்களில் பணியாற்ற விரும்பும் மருத்துவ வல்லுநர்களையும் உருவாக்கும்.

கீழடி அகழ்வாராய்ச்சியில், சங்ககாலப் பண்பாட்டின் செழுமையான தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. இந்த முக்கிய தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. இந்த முக்கிய தொல்பொருட்கள் தற்போது தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டு வரும் உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகத்தில் காட்சிப்படுத்தப்படும். இதுவரை, சொற்குவை வலைதளத்தில் 3 லட்சத்து 85 ஆயிரத்து 788 சொற்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.

கொரோனா நிவாரணம் மற்றும் மீட்டெடுப்பு நடவடிக்கைகளுக்காக, இதுவரை ரூ.13,208 கோடி தனது சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து தமிழ்நாடு அரசு செலவிட்டுள்ளது.

பிற மாநிலங்களை போல் அல்லாமல், தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை தாமதப்படுத்தவோ, குறைக்கவோ இல்லை. உரிய நேரத்தில், செலவு குறைந்த கடன்களை பெற்றதன் மூலம் கொரோனா பெருந்தொற்று நோயின் கடுமையான தாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டு மக்களை இவ்வரசு பாதுகாத்துள்ளது.

நிவர் மற்றும் புரெவி புயல்களால் ரூ.3,750 கோடி மற்றும் ரூ.1,514 கோடி மதிப்பில் ஏற்பட்ட சேதங்களை, விரிவாக விளக்கக்கூடிய 2 கோரிக்கை மனுக்களை மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அளித்துள்ளது. மேலும், இந்த நிதியை விரைவாக வழங்குமாறு மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம். மத்திய அரசின் நிதி விடுவிப்பிற்கு காத்திருக்காமல், பயிர் சேதமடைந்த அனைத்து விவசாயிகளுக்கும், உச்சவரம்பின்றி நிவாரணத் தொகையை மாநில அரசு வழங்கியுள்ளது.

உரிய நேரத்தில் இந்த அரசு நிதி உதவியினை வழங்கியதால் விவசாயிகளின் துயர் துடைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கவர்னர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com