மீனவர்கள் மீதான அத்துமீறலை இலங்கை கைவிட மத்திய அரசு எச்சரிக்க வேண்டும்

மீனவர்கள் மீதான அத்துமீறலை இலங்கை கைவிட மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.
மீனவர்கள் மீதான அத்துமீறலை இலங்கை கைவிட மத்திய அரசு எச்சரிக்க வேண்டும்
Published on

சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய 'டுவிட்டர்' பதிவில் கூறி இருப்பதாவது:-

வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே 10 படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடித்துள்ளனர்; அவர்களின் வலைகள் அறுத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன; பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை படையினர் தாக்குதல் நடத்துவது கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது முறையாகும். கடந்த 10-ந் தேதி நள்ளிரவிலும் கச்சத்தீவு பகுதியில் இதே போன்று தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் 18-ந்தேதி கைது செய்யப்பட்ட 42 மீனவர்களும், 20-ந்தேதி கைது செய்யப்பட்ட 13 மீனவர்களும் இலங்கை அரசால் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. இன்னொருபுறம் நடுக்கடலில் இலங்கை படையின் அத்துமீறல் தொடருகிறது. இவற்றுக்கு முடிவு எப்போது?. ஒரு புறம் இலங்கைக்கு இந்தியா நிதியுதவியும், ராணுவ உதவிகளையும் வாரி வழங்குகிறது. மறுபுறம் தமிழக மீனவர்களை இலங்கைப் படை கொடுமைப்படுத்துகிறது. இது என்ன நியாயம்? மீனவர்கள் மீதான அத்துமீறலை கைவிடும்படி இலங்கையை, இந்திய அரசு எச்சரிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com