மத்திய அரசின் மானியம் குறைந்ததால் 8 ஆயிரம் சத்துணவு மையங்கள் மூடப்படுகிறது

மத்திய அரசின் மானியம் குறைந்ததால் தமிழ்நாட்டில் 8 ஆயிரம் சத்துணவு மையங்கள் மூடப்படுகிறது. இதையடுத்து அருகில் உள்ள மையத்தில் சமைத்து மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
மத்திய அரசின் மானியம் குறைந்ததால் 8 ஆயிரம் சத்துணவு மையங்கள் மூடப்படுகிறது
Published on

சென்னை,

பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் 1956-ம் ஆண்டு அரசு தொடக்கப் பள்ளியில் படித்த குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தினார்.

எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது 1982-ம் ஆண்டு மதிய உணவு திட்டத்தை, சத்துணவு திட்டமாக விரிவுபடுத்தினார். இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வரை படிக்கும் ஏழை-எளிய மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

சத்துணவு திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 203 சத்துணவு மையங்கள் இயங்கி வருகின்றன. சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள் என 90 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

சத்துணவு மையங்கள் மூலம் 51 லட்சத்து 96 ஆயிரத்து 780 மாணவ-மாணவிகள் மதிய உணவு சாப்பிட்டு வருகின்றனர்.

தமிழக அரசின் நிதி மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த சத்துணவு திட்டத்துக்கு கடந்த 1995-ம் ஆண்டு முதல் மத்திய அரசு மானியம் வழங்கியது. இதன் மூலம் 60 சதவீதம் மத்திய அரசு நிதி, 40 சதவீதம் மாநில அரசு நிதியில் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தநிலையில் மத்திய அரசு மானியத்தை 60 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைந்துவிட்டது. இதனால் தமிழக அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சத்துணவு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக 1992-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசாணையின்படி, 25 மாணவ-மாணவிகளுக்கு குறைவாக மதிய உணவு சாப்பிடும் 8 ஆயிரம் சத்துணவு கூடங்களை மூடுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக சமூக நலத்துறை கமிஷனர் வே.அமுதவல்லி அனைத்து மாவட்ட கலெக்டர்கள் (சென்னை மாவட்டம் நீங்கலாக), சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்(கல்வி) ஆகியோருக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எம்.ஜி.ஆரின் சத்துணவு திட்டத்தின் கீழ் 25 மாணவ-மாணவிகளுக்கு குறைவான எண்ணிக்கையில் பயனடைந்து வரும் சத்துணவு மையங்களை மூடிவிட்டு, அந்த மையத்தில் பயனடைந்து வரும் மாணவர்களுக்கு அருகில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் இருந்து உணவு சமைத்து பரிமாற வழி வகை செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது.

எனவே மலைப் பகுதிகள் நீங்கலாக இதர பகுதிகளில் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களில் 25-க்கும் குறைவான பயனாளிகளுடன் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களில், சமையல் செய்து வழங்குவதற்கு பதிலாக, அருகில் உள்ள மையத்தில் சமைத்த உணவை எடுத்து சென்று பரிமாற நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே மூடப்படும் மையங்களில் ஒரு உதவியாளரை மட்டும் பணியாற்றிட அனுமதிக்க வேண்டும்.

சத்துணவு அமைப்பாளர்களை காலியாக உள்ள மையங்களுக்கு பணி மாறுதல் செய்ய வேண்டும். மலைப்பகுதிகளில் 25 மாணவ-மாணவிகளுக்கு குறைவான பயனாளிகளுடன் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களில் ஒரு சமையலரை மட்டும் தொடர்ந்து பணியாற்றிட அனுமதிக்க வேண்டும்.

இப்பணிகளை வருகிற 28-ந் தேதிக்குள் முடித்து அறிக்கையை அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழக அரசு 2018-19-ம் ஆண்டு சத்துணவு திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரூ.1,917.25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய அரசு ரூ.446 கோடி மட்டும் ஒதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

காமராஜர் மதிய உணவை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக கடந்த 1955-ம் ஆண்டு சென்னையில் நடந்த ஆசிரியர்கள் மாநாட்டில் அறிவித்தார். அப்போது பள்ளி கல்வி இயக்குனராக இருந்த சுந்தரவடிவேலுவிடம், ஏழைக்குழந்தைகள் அனைவருக்கும் இலவச மதிய உணவு வழங்கினால் எவ்வளவு செலவாகும் என்று காமராஜர் விசாரித்தார். அதற்கு சுந்தர வடிவேல், தொடக்கப்பள்ளிகளில் 16 லட்சம் பேர் படிக்கிறார்கள். அவர்களில் 5 லட்சம் பேருக்கு மதிய உணவு கொடுக்க குறைந்தபட்சம் ரூ.1 கோடி செலவாகும் என்று கூறினார். பின்னர் மாநாட்டில் காமராஜர் பேசும்போது, ஒருவேளை கஞ்சி கிடைத்தால் போதும் என்று, ஆடு, மாடு மேய்க்கப்போய், தங்கள் எதிர்காலத்தைப் ஏழை குழந்தைகள் பாழாக்கிக்கொள்கிறார்கள். அவர்களைப் பள்ளிக்கூடங்களுக்கு வரச்செய்வது முக்கியம். அதற்கு, ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கவேண்டும். இதற்கு, தொடக்கத்தில் ரூ.1 கோடி செலவாகும்.

சில ஆண்டுகளில் ரூ.3 கோடி, ரூ.4 கோடி கூட ஆகும். நம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு இது பெரிய பணம் அல்ல. தேவைப்பட்டால் அதற்காக தனி வரி கூட போடலாம் என்றார்.

அரசின் முடிவுக்கு எதிர்ப்பு: சத்துணவு ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்
8 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடும் அரசு உத்தரவுக்கு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த சங்கத்தின் மாநில தலைவர் ப.சுந்தரம்மாள், பொதுச்செயலாளர் இரா.நூர்ஜஹான், பொருளாளர் பே.பேயத்தேவன் ஆகியோர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆரால் தமிழகத்தில் நிறைவேற்றப்படும் சத்துணவு திட்டம் உலகம் போற்றும் திட்டமாக மாறி உள்ளது. தற்போது மத்திய அரசு சத்துணவு திட்டத்துக்கு வழங்கும் மானியத்தை குறைத்ததால், 8 ஆயிரம் பள்ளிகளில் சத்துணவு மையங்களை மூடுவதற்கு திட்டமிட்டுள்ளது.

இதனால் 1.25 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு கிடைப்பதிலும், 35 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 24 ஆயிரம் சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்திலும் பாதிப்பு ஏற்படும். எனவே சத்துணவு மையங்கள் மூடப்படும் உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வருகிற 27-ந் தேதி(நாளை) மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com