

சென்னை,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
இந்திய மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்து உள்ள 'நிதிநிலை அறிக்கை' (பட்ஜெட்) நாட்டின் பொருளாதரத்தை மீட்டு எடுப்பதற்குப் பதிலாக மேலும் வீழ்ச்சிக்கே இட்டுச் செல்லும். தேர்தல் காலம் என்பதைக்கூடக் கருதாமல் தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழ்நாட்டுக்கு எந்தவொரு பெரிய திட்டமும் இல்லை. தேர்தலுக்காகக்கூட எந்த அறிவிப்பும் இல்லை. ரெயில்வே காரிடார் மேம்பாட்டில், 'சென்னை - ஐதராபாத்' மற்றும் 'சென்னை - பெங்களூரு' குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டுக்குள் எந்த ரெயில்வே திட்டமும் இல்லை.
மாநிலங்களுக்கான வரி வருவாய்ப் பகிர்வு 41 விழுக்காடாகவே தொடரும் என்கிற 16 ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரையானது தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தனிநபர் வருமான வரியில் எந்தச் சலுகையும் இல்லை.
வரலாறு காணாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. மக்களிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு கடந்த பத்தாண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது. அமெரிக்க வரி விதிப்பு பயங்கரவாதத்தை எதிர்கொள்ள திராணியற்று அமெரிக்க அரசோடு ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை இதுவரை மோடி அரசால் செய்து கொள்ள முடியவில்லை. கோடிக்கணக்கான கிராமப்புற ஏழை மக்களுக்குப் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட 100 நாள் வேலை திட்டத்தையும் மோடி அரசு நீர்த்துப் போகச் செய்துவிட்டது. இதற்கெல்லாம் தீர்வு காண்பதற்கு இந்த பட்ஜெட்டில் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிகப்பெரிய ஏமாற்றத்தையே இந்த பட்ஜெட் கொடுத்துள்ளது.
வேலையில்லாத் திண்டாட்டம் மிக மிக அதிகமாகி விட்டது. மோடி அரசாங்கத்தின் பட்டதாரி இளைஞர்கள் எல்லாம் படிப்புக்கேற்ற வேலையில்லாமல் “கிக்” பணியாளர்களாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். மோடி அரசு பதவி ஏற்றதும் ஆரவாரத்தோடு அறிவிக்கப்பட்ட ‘மேக் இன் இந்தியா’ திட்டம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவி விட்டது. “உற்பத்தித் துறையின் பங்களிப்பை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) 25 விழுக்காடாக உயர்த்துவோம், 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்” என்று அது அறிவித்தது. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு பத்தாண்டுகள் கடந்தபிறகும் கூட ஜிடிபியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 15லிருந்து 17 சதவீதத்தைத் தாண்டவில்லை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்ற மோடி அரசால் அமைப்புசார் துறையில் ஒட்டுமொத்தமாக இந்த 12 ஆண்டுகளில் 2 கோடி பேருக்குக் கூட வேலைவாய்ப்பை உருவாக்க முடியவில்லை. வேலை வாய்ப்பை உருவாக்க இந்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.
அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய சிறு குறு நடுத்தர தொழில் துறை மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் 2021 முதல் 2025 வரையிலான காலத்தில் சுமார் 70 ஆயிரம் சிறு நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
அமைப்புசாரா தொழில்களை நம்பியிருக்கும் தொழிலாளர்களும் கடுமையான நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இருந்த தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்கள் எல்லாம் மோடி அரசால் ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில் எந்தவித பாதுகாப்பும் இல்லை என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பட்ஜெட் அறிவித்ததும் பங்குச் சந்தை கடுமையாகச் சரிவதைப் பார்த்தாலே இந்த பட்ஜெட் எவ்வளவு பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பட்ஜெட் மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கும் பட்ஜெட் இது. தமிழ்நாட்டு மக்கள் எதிர்வரும் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.