10 நிமிடத்தில் எப்படி உணவை டெலிவரி செய்ய முடியும்? சொமேட்டோ நிறுவனத்திடம் சென்னை போக்குவரத்து போலீஸ் கேள்வி!

10 நிமிடத்தில் உணவு டெலிவரி என்று அறிவித்த சொமேட்டோ நிறுவனத்திடம் சென்னை போக்குவரத்து போலீஸ் விளக்கம் கேட்க முடிவு.
10 நிமிடத்தில் எப்படி உணவை டெலிவரி செய்ய முடியும்? சொமேட்டோ நிறுவனத்திடம் சென்னை போக்குவரத்து போலீஸ் கேள்வி!
Published on

சென்னை,

உணவு பொருட்களை வீட்டு வாசலுக்கே கொண்டுவந்து வழங்கும் பிரபல உணவுப்பொருள் விநியோக நிறுவனமான சொமேட்டோ, வாடிக்கையாளர்கள் உணவை ஆர்டர் செய்த 10 நிமிடங்களில், வீட்டில் டெலிவரி செய்யப்படும் புதிய வசதியை கொண்டு வந்துள்ளதாக அறிவித்திருந்தது.

ஆனால், இந்த புதிய வசதியால் டெலிவரி செய்யும் ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர்.

அவசர அவசரமாக டெலிவரி செய்ய வேண்டும் என்று பணியாளர்கள் அதிவேகத்தில் வாகனங்களை இயக்கி செல்லும் நிலை உருவாகும். இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது என்று பலரும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சொமேட்டோ நிறுவனத்திடம் 10 நிமிடத்தில் உணவு டெலிவரி அறிவிப்பு குறித்து விளக்கம் கேட்கப்பட உள்ளதாக சென்னை போக்குவரத்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் பின்விளைவுகள் குறித்து ஆலோசிக்காமல் செயல்படுத்தப்படுவது குறித்து அந்த நிறுவன அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை போக்குவரத்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சில நாட்களுக்கு முன்னர், சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் இதுதொடர்பாக விளக்கம் அளித்தார்.சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் கூறுகையில்,

10 நிமிட டெலிவரி சேவை "குறிப்பிட்ட அருகிலுள்ள இடங்கள், பிரபலமான மற்றும் தரப்படுத்தப்பட்ட பொருட்களுக்கு மட்டுமே. 30 நிமிட டெலிவரியைப் போலவே எங்கள் டெலிவரி பார்ட்னர்களுக்கு இது எப்படி பாதுகாப்பானது என்பதை அனைவரும் தெரிந்துகொள்ளவும்.

பொருட்களை தாமதமாக டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு அபராதம் இல்லை. சரியான நேரத்தில் டெலிவரி செய்வதற்கு ஊக்கத்தொகையும் கொடுக்கப்போவது இல்லை.

சாலைப் பாதுகாப்பு குறித்து எங்கள் விநியோக ஊழியர்களுக்கு நாங்கள் தொடர்ந்து கற்பித்து வருகிறோம். ஊழியர்களுக்கு விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டை நாங்கள் தொடர்ந்து வழங்கி வருகிறோம்.

குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் இருப்பிடங்களுக்கு மட்டும், 10 நிமிட சேவையை வழங்குவதற்காக, புதிய உணவு நிலையங்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம். 10 நிமிட டெலிவரி மூலம் ஒரு ஆர்டருக்கு சாலையில் செலவழிக்கப்படும் நேரம் குறையும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com