

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு கரூருக்கு வருகை தந்தார். இதனையடுத்து நேற்று காலை ராயனூர் பகுதியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கரூர் மாவட்டத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆட்சி அமைந்தவுடன் முதல்-அமைச்சர் போட்ட முதல் கையெழுத்து பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் கட்டண வசதி செய்து கொடுக்கப்படும் என்ற திட்டம்தான். அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வசதி திட்டம் 2 நாட்களுக்கு முன்பு வரை 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பயன்அடைந்து உள்ளனர்.
கல்வி, மருத்துவத்துக்கு முக்கியத்துவம்
இந்த ஆட்சியில் கல்விக்கும், மருத்துவத்திற்கும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அதேபோல் புதுமைப்பெண் திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 அவர்களது வங்கி கணக்கில் செலுத்துகிறோம். இதேபோல் இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம், இன்னுயிர் காக்கும் நம்மை காக்கும் 48, நகைக்கடன், விவசாய கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி என இதுபோன்ற பல்வேறு திட்டங்களை நமது அரசு கடந்த 20 மாதங்களில் செயல்படுத்தி கொண்டு இருக்கிறது.
1,000 யூனிட் இலவச மின்சாரம்
விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட் இலவச மின்சாரமாகவும், கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரமாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார் முதல்-அமைச்சர். சொன்னதை மட்டும் அல்ல, சொல்லாததையும் செய்து காட்டுவதுதான் இந்த ஸ்டாலின் பாணி என அறிவித்து தினம், தினம் மக்கள் நலத்திட்டங்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு வருகிறது.
100 சதவீதம்
20 மாத காலத்தில் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ள பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்னும் 3 வருடங்கள் இருக்கின்றன. தேர்தல் வாக்குறுதியில் சொன்ன அனைத்து வாக்குறுதியையும் 100 சதவீதம் முதல்-அமைச்சர் நிறைவேற்றுவார்.
இவ்வாறு அவா பசினார்.
விழாவில், ரூ.267.43 கோடி மதிப்பீட்டில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 19 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.