

திருநெல்வேலி,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருநெல்வேலி உள்ள மண்டல அலுவலகத்திற்கு வருகை தந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்கி விடலாம் என அரசியல் கட்சியினர் எண்ணுகிறார்கள். பணத்திற்காக வாக்களிக்கும் நிலை மாற வேண்டும். அதன் பிறகு ஊக்கத்தொகைகள் வழங்குவதை கட்சிகள் நிறுத்தும். கூட்டணி குறித்து பெரியவர் ராமதாஸ் என்ன முடிவு எடுக்கிறார் என எனக்கு தெரியவில்லை தேசிய ஜனநாயக கூட்டணி மேலும் வலுப்பெற வேண்டும். எந்த கட்சிகளோடு கூட்டணி அமைய வேண்டும் என்பது அந்தந்த கட்சி தலைவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நீடிக்கிறதா என்பதே பில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. கடந்த தேர்தல்களில் கூட்டணி கட்சிகளின் பலத்தால் மட்டுமே திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. திமுக காங்கிரஸ் இடையே சீட்டுகளை பிரிப்பதில் கடுமையான போட்டி நிலவுகிறது 35 இடங்கள் முதல் 40 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்கிறது அமைச்சரவையிலும் இடம் கேட்பதாக தெரிகிறது. எனவே கூட்டணியில் இடம் பெறுவார்களா? வெளியேறுவார்களா என்பது விரைவில் தெரிந்து விடும்.
ஓபிஎஸ் பற்றி நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அவர் எந்தக் கூட்டணியிலும் போட்டியிடலாம் எந்த கட்சியிலும் சேரலாம் அதில் நாங்கள் தலையிடவில்லை மாறாக எம்ஜிஆர் ஜெயலலிதா ஆசீர்வாதத்தோடு திராவிட முன்னேற்ற கழகம் மீண்டும் ஆட்சி அமைக்கும் என சட்டமன்றத்திலேயே அவர் ஆதரவு உறுப்பினர் ஐயப்பனை பேச வைத்து அது சட்டமன்ற பதிவேட்டில் ரெக்கார்ட் செய்யப்பட்டது உண்மையான அதிமுக, அமமுக தொண்டனால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வேண்டும் என திருமாவளவன் தெளிவாக சொல்லட்டும் அவர் பொது வழியில் அது பற்றி அவர் கூறிய பிறகு அதற்கு பதிலளிக்கிறேன் . தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மோசமாக உள்ளது அனைத்து பகுதிகளிலும் கஞ்சா கிடைக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர். வீடுகளில் வயதானவர்கள் தனியாக இருக்க முடியாத நிலை உள்ளது எதிலும் எங்கும் ஊழல் மயமாக தமிழகத்தில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
எங்களைப் பொருத்தவரை திமுக ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வில்லை என்பதை ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டேன். தகுதியானவர்களை சட்டமன்ற உறுப்பினர்களாக்குவேன். நாங்குநேரி தொகுதியில் கடந்த முறையை 40 ஆயிரம் வாக்குகளை பெற்றோம் எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது விரைவில் முடிவாகும். திராவிட முன்னேற்ற கழகம் காங்கிரசின் மிரட்டலை சமாளிக்க முடியாமல் உள்ளது. விஜயை பார்த்து முதல்-அமைச்சர் பயப்படுகிறார் தேசிய ஜனநாயக கூட்டணி பலம் பெற்றுள்ளது ஐந்தாண்டு கால ஆட்சியில் மக்கள் வேதனையில் உள்ளனர்.
பணநாயகத்தை நம்பி வெற்றி பெற்று விடலாம் என முதல்-அமைச்சர் நினைக்கிறார். திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைக்குச் சென்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மயக்கமடைந்து வெளியேறியதை பார்த்தோம். மூன்று தொகுதிகளில் கடந்த முறை போட்டியிட்டு அவர்களுக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே கொடுப்பதாக திமுக பேசியதாக தெரிகிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சியை தலைமை ஏற்றுள்ளது.
தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்துள்ளது. சுமூக பேச்சுவார்த்தை மூலமாக பாரதிய ஜனதா கட்சியின் வழிகாட்டுதலோடு அதிமுகவிடமிருந்து தொகுதிகளை பெறுவோம். பாராளுமன்ற மேலவையிலும் தற்போது போட்டியில்லை நாங்கள் அதற்கான இடத்தை கேட்கவில்லை.
விரைவில் எங்களது கூட்டணியில் எத்தனை இடங்கள் குறித்து பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணப்படும் சமூகமான நிலை எட்டப்படும். கவுரவமான தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அனைவரும் பாராட்டும் வகையில் போட்டியிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.