முதல்வர் மருந்தகத்தில் கிடைக்கும் மருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் - அரசிடம் கோரிக்கை மனு

முதல்-அமைச்சர் அலுவலகத்திலும், துணை முதல்-அமைச்சர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மருந்தகத்தில் கிடைக்கும் மருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் - அரசிடம் கோரிக்கை மனு
Published on

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் முதல்வர் மருந்தகம் நடத்திவரும் தனிநபர் தொழில் முனைவோர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் இன்று காலை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வீட்டிற்கு சென்று அவரது உதவியாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தொடர்ந்து, கூட்டமைப்பின் தலைவர் எம்.ஏ.அன்பழகன் தலைமையில் தலைமைச் செயலகம் வந்த நிர்வாகிகள், முதல்-அமைச்சர் அலுவலகத்திலும், துணை முதல்-அமைச்சர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளித்தனர். முன்னதாக, இன்று காலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீட்டிற்கும் சென்று கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய அரசின் மக்கள் மருந்தகத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மருந்துகள் கிடைக்கின்றன. அதைப்போல், முதல்வர் மருந்தகங்களிலும் அதிக மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் மருந்தகம் நடத்தும் எங்களுக்கு லாப சதவீதத்தை அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும்.

மருந்தாளுனர் சம்பளம், கடை வாடகை என மாதம் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் வீதம் 2 ஆண்டுகளுக்கு தர வேண்டும். அப்போதுதான் நாங்கள் நஷ்டம் இல்லாமல் தொடர்ந்து கடையை நடத்த முடியும்.

முதல்வர் மருந்தகத்திற்கு அனுப்பப்பட்ட மருந்துகளில் விற்பனையாகாத மருந்துகளை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். மாவட்ட மருந்துக் கிடங்கில் இல்லாத மருந்துகளை வாடிக்கையாளர்களின் அவசர தேவைக்காக நாங்கள் வெளியில் கொள்முதல் செய்திட அனுமதி வழங்க வேண்டும். மாநில அளவிலான மருந்து கொள்முதல் குழுவில் தனிநபர் தொழில் முனைவோர் இருவர் இணைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com