

சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் அலுவலகத்தின் (CMO Tamil Nadu) அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஒரே நாளில் 11 லட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர்.
தமிழக முதல்-அமைச்சர் அலுவலகத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் முதல்-அமைச்சரின் அரசு நடவடிக்கைகள், முக்கிய தலைவர்களுடனான சந்திப்புகள், நலத்திட்ட அறிவிப்புகள், அரசாணை கையொப்பமிடும் நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் உள்ளிட்டவை மக்கள் தெரிந்துகொள்வதற்காக பகிரப்படுகின்றன.
முன்னதாக, முதல்-அமைச்சர் அலுவலகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கம் 4 லட்சம் பின்தொடர்வோர்களுடன்(Followers) இயங்கி வந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சராக மே 10 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். இதையடுத்து, தமிழ்நாடு முதல்-அமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் நேற்று(மே 11) ஒரே நாளில் மட்டும் 11 லட்சம் பின்தொடர்வோர்களைக் கடந்தது.
தற்போதைய நிலவரப்படி, 22 லட்சம் பின்தொடர்வோர்களைக் கொண்டுள்ளது. அரசு நிர்வகிக்கும் சமூக வலைதளப் பக்கம் குறுகிய காலத்தில் பின்தொடர்வோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கதாகவே உள்ளது. இது புதிய அரசின் மீது இளைஞர்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்பைக் காட்டுகிறது. முதல்-அமைச்சரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் மட்டுமின்றி, எக்ஸ், முகநூல் பக்கங்களை பின்தொடர்வோர்களும் குறிப்பிடத்தகுந்த அளவு உயர்ந்துள்ளது.