போதிய பராமரிப்பின்றி காணப்படும் சிறுவர் பூங்கா

போதிய பராமரிப்பின்றி காணப்படும் சிறுவர் பூங்கா
போதிய பராமரிப்பின்றி காணப்படும் சிறுவர் பூங்கா
Published on

தஞ்சை கே.எம்.எஸ் நகரில் உள்ள சிறுவர் பூங்கா போதிய பராமரிப்பின்றி புதர்மண்டி காட்சி அளிக்கிறது. இதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

சிறுவர் பூங்கா

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை சுந்தரம் நகர் அருகே கே.எம்.எஸ். நகர் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியை சோந்த பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக ஊஞ்சல், சீசா, கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதை, மின்விளக்கு வசதி, செயற்கை நீரூற்று, சிமெண்டு இருக்கைகள், சறுக்குகள், அலங்கார பூக்கள் ஆகிய வசதிகளுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுவர் பூங்கா ஒன்று சுற்று சுவருடன் அமைக்கப்பட்டது.

இந்த பூங்காவிற்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து செல்வது வழக்கம். அங்குள்ள உபகரணங்களில் குழந்தைகள் விளையாடி மகிழ்வார்கள். மேலும் பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்வது, அமைதியான சூழலில் குழந்தைகள் விளையாடுவதை கண்டு ரசிப்பது என பொழுதை கழிப்பார்கள். தற்போது இந்த பூங்காவில் முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவில்லை.

குறுங்காடு போல்...

இதன் காரணமாக அங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் உடைந்து காணப்படுகின்றன. மேலும் பூங்காவில் செடிகள் ஆங்காங்கே அடர்ந்து வளர்ந்து புதர் போல் காணப்படுகின்றன. இதனால் பார்ப்பதற்கு பூங்கா குறுங்காடு போல் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- எங்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக கே.எம்.எஸ். நகர் சிறுவர் பூங்கா விளங்கியது. அங்கு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக சென்று வந்தோம். தற்போது அந்த இடத்தை பார்க்கவே வருத்தமாக உள்ளது. காரணம், முறையான பராமரிப்பின்றி கேட்பாரற்று கிடக்கிறது. குழந்தைகள் விளையாடி மகிழ்ந்த உபகரணங்கள் உடைந்து கிடக்கின்றன.

ஆங்காங்கே செடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. அதில் விஷ ஜந்துகள் பதுங்கி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் அந்த பூங்காவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இந்த நிலையில் பூங்கா பராமரிப்பின்றி காணப்படுவதால் பூங்காவின் வாசலில் அமர்ந்து சிலர் மது அருந்துவதும், சிலர் பாட்டில்களை உடைத்து செல்வதும் வழக்கமாக உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே பூங்காவை புதுப்பொலிவுடன் சீரமைத்து மீண்டும் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com