717 மதுபானக் கடைகள் மூடப்படுவது வரவேற்பிற்குரியது - மு. வீரபாண்டியன்

படிப்படியாக முழுமையான மதுவிலக்கை அமல் படுத்தும் திசைவழியில் அரசு செயல்பட வேண்டும்.
717 மதுபானக் கடைகள் மூடப்படுவது வரவேற்பிற்குரியது - மு. வீரபாண்டியன்
Published on

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய், தலைமையிலான அரசு தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி, போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் படி போதை பொருள் தடுப்பு சிறப்புப்படை, சிங்கப் பெண் சிறப்புப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.

அதோடு, வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டருக்குள் அமைந்திருக்கும், 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை, இரண்டு வார காலத்திற்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், மாதர், இளைஞர், மாணவர் அமைப்புகளும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வந்துள்ளன. இந்நிலையில், தவெக அரசின் இத்தகைய நடவடிக்கைகள் வரவேற்பிற்குரியது.

அதே சமயம், டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் பகுதிகளில் செயல்படும் எஃப் எல் 2 மதுபானக் கடைகள் உட்பட மனமகிழ் மன்றங்களில் மதுபானங்கள் விற்பனை நடப்பதன் மீது அரசின் நடவடிக்கை என்ன என்பது குறித்து அரசாணையில் தெளிவாக குறிப்பிடவில்லை. அவைகளும் மூடப்பட்டால்தான் அரசின் நோக்கம் நிறைவேறும். இந்த மதுபானக் கடைகள் மூடப்படுவதுடன், படிப்படியாக முழுமையான மதுவிலக்கை அமல் படுத்தும் திசைவழியில் அரசு செயல்பட வேண்டும். மதுபானக் கடைகள் மூடப்படும் நிலையில் கள்ளச்சாராயம், விஷசாராயம் விற்பனை தலைதூக்கும் நிலை உருவாகாமல் தடுப்பதற்கு அரசு விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதே போன்று, குடிநோய் மற்றும் போதைப் பழக்கத்திற்கு ஆளானவர்களை, அப்பழக்கங்களிலிருந்து மீட்பதற்கான இலவச சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை மாவட்டந்தோறும் உருவாக்கிட வேண்டும்.

மேலும், மூடப்படும் டாஸ்மாக் கடைகளில் கடந்த 2003 ஆம் ஆண்டில் இருந்து 23 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் சுமார் 3500 டாஸ்மாக் பணியாளர்கள் வேலை வாய்ப்பையும், அவர்களது குடும்பங்கள் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும். இக்கடைகள் மூடப்படுவதற்கு முன்பாக அரசின் பிறத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் அவர்கள் பணிநியமனம் செய்யப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com