தேர்வு சரியாக எழுதவில்லை... மன வருத்தத்தில் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு

கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவி சரியாக எழுதவில்லை என மனவருத்தத்தில் இருந்துள்ளார்.
தேர்வு சரியாக எழுதவில்லை... மன வருத்தத்தில் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு
Published on

மதுரை,

மதுரை துவரிமான் மேலத்தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். சுமைதூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி வனிதா. இந்த தம்பதிக்கு பிரியதர்ஷினி, பிரசன்னா தேவி (18 வயது) என்ற 2 மகள்கள் இருந்தனர். சக்திவேல் (13 வயது) என்ற மகனும் உண்டு. பிரியதர்ஷினி 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், கார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் சமயநல்லூர் அருகில் ஊர்மெச்சிகுளத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

பிரசன்னாதேவி ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 5-ந்தேதி கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு வந்த பிரசன்னா தேவி, தனது தோழியை செல்போனில் தொடர்பு கொண்டு தேர்வு சரியாக எழுதவில்லை என தெரிவித்து இருந்ததாகவும், இதனால் மனவருத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது, ஒரு அறையில் பிரசன்னா தேவி, சேலையால் தூக்கிட்டு தொங்கினார். இதற்கிடையே வீடு திரும்பிய தாயார் வனிதா, இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது, பிரசன்னா தேவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சமயநல்லூர் போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com