பாதுகாப்பு வடிவமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ரெயில் பெட்டிகளின் மோதல் சோதனை வெற்றி!

எதிர்காலத்தில் இந்திய ரெயில்வே தயாரிக்கும் வந்தே பாரத், எல்.எச்.பி போன்ற அனைத்து ரெயில்களின் பாதுகாப்பு வடிவமைப்பை மேலும் வலுப்படுத்தவும் பெரும் உதவியாக இருக்கும்.
ரெயில் பெட்டி
Published on

சென்னை,

ரெயில்களின் பாதுகாப்பு வடிவமைப்பு வலுப்படுத்தும் நோக்கில் ரெயில் பெட்டிகளின் முழு அளவிலான மோதல் சோதனையை இந்திய ரெயில்வே வெற்றிகரமாக செய்தது.

முழு அளவிலான மோதல் சோதனை

இந்திய ரெயில்வேயின் லக்னோவில் உள்ள ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பு (ஆர்.டி.எஸ்.ஓ.) மற்றும் இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (ஏ.ஆர்.ஏ.ஐ.) இணைந்து நவீன ரக ரெயில் பெட்டியை (எல்.எச்.பி.) முழு அளவிலான மோதல் சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கின்றன. பொதுவாக கணினி உருவகப்படுத்துதல் (கம்ப்யூட்டர் சிமுலேசன்) மூலம் மட்டுமே இந்த சோதனைகள் நடத்தப்படும். ஆனால் இந்த முறை நிஜமான ரெயில்களை கொண்டு நேரடி மோதல் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

இந்த சோதனையில் 2 எல்.எச்.பி. பெட்டிகள் ஈடுபடுத்தப்பட்டன. ஒரு பிரத்தியேக சாய்வு தளத்தில் இருந்து இந்த பெட்டிகள் விடுவிக்கப்பட்டு, மணிக்கு 43 முதல் 44 கி.மீ. வேகத்தில் சென்று தண்டவாளத்தில் நிலையாக நிறுத்தப்பட்டிருந்த ஒரு சரக்கு பெட்டி மீது மோதவிடப்பட்டன. இது சர்வதேச அளவில் ரெயில்களின் பாதுகாப்புத் தரத்தை நிர்ணயிக்கும் ரெயில் வாகன பாகங்களுக்கான மோதல் தாங்குதிறன் தேவைகள் 'இ.என்.15227' என்ற ஐரோப்பிய தரநிலையின் படி நடத்தப்பட்டது.

தொழில்நுட்பம்

விபத்து நடக்கும் போது ஏற்படும் அதிரடி விசையை ரெயில் பெட்டியின் கட்டமைப்பு எவ்வாறு அந்த பாதிப்பை உள்வாங்கி பிரதிபலிக்கிறது? என்பதை ஆய்வு செய்வதும், மோதலின்போது பயணிகள் இருக்கும் பகுதி நசுங்கிவிடாமல். அவர்களின் உயிருக்கு ஆபத்து வராத வகையில் கட்டமைப்பு உறுதியாக இருப்பதை உறுதி செய்தல், விபத்தின்போது ஒரு பெட்டி மற்றொன்றின் மீது ஏறிவிடாமல் தடுக்கும் தொழில்நுட்பத்தை சரிபார்த்தல் போன்றவை இதன் நோக்கம் ஆகும்.

மோதலின்போது மில்லி வினாடிகளில் நடக்கும் மாற்றங்களை கண்காணிக்க ரெயில் பெட்டிகளில் நூற்றுக்கணக்கான அதிநவீன சென்சார்கள் பொருத்தப்பட்டு இருந்தன. இதன் மூலம் கிடைத்த நேரடித் தரவுகள் எதிர்காலத்தில் இந்திய ரெயில்வே தயாரிக்கும் வந்தே பாரத், எல்.எச்.பி போன்ற அனைத்து ரெயில்களின் பாதுகாப்பு வடிவமைப்பை மேலும் வலுப்படுத்தவும், விபத்துகளின் போது உயிரிழப்புகளை முற்றிலும் தவிர்க்கவும் பெரும் உதவியாக இருக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com