அடையாள அட்டைகளை வீசி எறிந்து மீனவர்கள் திடீர் சாலை மறியல்

பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பை தடுக்க கோரி அடையாள அட்டைகளை வீசி எறிந்து மீனவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
அடையாள அட்டைகளை வீசி எறிந்து மீனவர்கள் திடீர் சாலை மறியல்
Published on

வானூர்,

பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பை தடுக்க கோரி அடையாள அட்டைகளை வீசி எறிந்து மீனவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மீனவ குடும்பங்கள்

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே நடுக்குப்பம், பொம்மையார்பாளையம். சின்ன முதலியார் சாவடி குப்பம், கோட்டக்குப்பம், பிள்ளைச்சாவடி ஆகிய மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் தொடர் கடல் அரிப்பால் கடற்கரையோரம் உள்ள வீடுகள் சேதம் அடைந்தது.

புதுவையை ஒட்டிய தமிழக பகுதியான கோட்டக்குப்பம் அருகே உள்ளது பிள்ளைச்சாவடி கிராமம். இங்கு சுமார் 350க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரமே மீன்பிடி தொழில் ஆகும்.

கடல் அரிப்பு

சமீபத்தில் ஆரோவில் பீச், பொம்மையார்பாளையம் பகுதிகளில் கடல் அரிப்பை தடுக்க அரசு சார்பில் கற்கள் கொட்டப்பட்டன. ஆனால் பக்கத்து கிராமமான பிள்ளைச்சாவடியில் கற்கள் கொட்டப்படவில்லை.

தற்போது பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக பிள்ளச்சாவடி கிராமத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டு 75 மீட்டர் தூரத்துக்கு இருந்த மணல் பரப்பு தற்போது 42 மீட்டர் ஆக குறைந்துள்ளது.

மேலும் இக்கிராம மக்களுக்கு படகு நிறுத்த போதிய இடம் இல்லாததால் பக்கத்து மீனவ கிராமத்தை நாடவேண்டியுள்ளது. இதனால் படகுகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் மீனவர்கள் புகார் கூறி வந்தனர்.

சாலை மறியல்

கோட்டக்குப்பத்தில் இருந்து பொம்மையார்பாளையம் வரை கற்களை கொட்டிய அரசு புதுவை எல்லையோரம் உள்ள பிள்ளைச்சாவடி கிராமத்தை ஏன் புறக்கணிக்க வேண்டும் என கேட்டு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் ஆகியோரிடம் மனு கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட ராட்சத அலையால் பிள்ளைச்சாவடி மீனவ குடியிருப்புக்குள் கடல்நீர் புகுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். நேற்று காலை திடீரென கிழக்கு கடற்கரை சாலைக்கு வந்து அங்கு மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றன. சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்தன. நின்றன. இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

போலீசார் சமரசம்

இதுபற்றி தகவல் அறிந்த வானூர் தாசில்தார் சங்கரலிங்கம், கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதை ஏற்காமல் மீனவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தங்களுக்கு உரிய முடிவு தெரியாவிட்டால் மறியலை கைவிடமாட்டோம், மாவட்ட கலெக்டர், வருவாய் துறை அதிகாரிகள், மீன் வளத்துறை அதிகாரிகள் உடனே இங்கு வரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

அடையாள அட்டைகளை வீசினர்

போராட்டத்தின் போது கையோடு கொண்டு வந்து இருந்த தங்களது குடும்ப அட்டை, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகளை சாலையில் வீசி எறிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அரசு அளிக்கும் அடையாள அட்டைகள் மட்டும் எங்களிடம் உள்ளதே தவிர தமிழக அரசும், மாவட்ட கலெக்டரும் எங்கள் மீது எந்த அக்கறையும் காட்டவில்லை. பின்னர் எதற்கு அடையாள அட்டை என பெண்கள் கண்ணீர் மல்க கூறினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com