மக்கள் விரும்பாத கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது - நடிகை குஷ்பு


மக்கள் விரும்பாத கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது - நடிகை குஷ்பு
x

இது மக்களை ஏமாற்றுவதற்காக காங்கிரஸ் நடத்தும் போராட்டம் என குஷ்பு தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க துணை தலைவர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

நாட்டின் ஆத்மாவாக இருப்பவர் மகாத்மா என்பதை எல்லோரும் அறிவோம். காங்கிரஸ் கட்சி அரசின் திட்டங்களுக்கு சோனியா குடும்ப பெயரை மட்டுமே சூட்டி பெருமைப்படுகிறது. ஆனால் பிரதமர் மோடி எந்த திட்டமாக இருந்தாலும் சரி, பிரதம மந்திரி திட்டம் என்றுதான் அறிவித்து வருகிறார். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தையும் 125 நாட்களாக அதிகரித்து உள்ளார். அதைப்பற்றி எல்லாம் காங்கிரஸ்காரர்கள் பேச மாட்டார்கள். நாட்டுக்காக உழைத்த எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள்.

சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் வல்லபாய் படேல், வ.உ.சிதம்பரனார் என்று பலரை சொல்லலாம். அவர்களின் பெயர்களை எல்லாம் வைக்க சொல்லி போராடலாமே. இது மக்களை ஏமாற்றுவதற்காக காங்கிரஸ் நடத்தும் போராட்டம். நாட்டில் இப்போது மக்கள் விரும்பாத கட்சியாக காங்கிரஸ் கட்சி மாறிவிட்டது. எனவே அவர்கள் பேசாமல் இருப்பது நல்லது.

நாட்டில் காங்கிரஸ் ஆட்சியின்போது தான் மிகப்பெரிய ஊழல் அரங்கேறியது. மிக கொடூரமான தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன. இன்று நாடு அமைதியாக இருக்கிறது. உலகம் முழுவதும் இந்தியாவுக்கு மோடி பெருமை சேர்த்து உள்ளார். காங்கிரஸ் கட்சி கரைந்து வரும் கட்சி. இப்போது கூடுதல் தொகுதிகள் கேட்பதாக தகவல்கள் வருகிறது.

அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் எல்லாம் ஜெயிப்போம் என்று சொல்ல முடியுமா? தேர்தல் நேரத்தில்தான் தி.மு.க. மக்களைப் பற்றி யோசிப்பது போல் பாசாங்கு காட்டுவார்கள். ஆசிரியர்கள் போராட்டம், தூய்மை பணியாளர்கள் போராட்டம், அரசு ஊழியர்கள் போராட்டம், டாக்டர்கள் போராட்டம் என்று பலரும் தங்கள் உரிமைகளுக்காக போராடுகிறார்கள்.

அவர்களைப் பற்றி எல்லாம் இதுவரை யோசிக்காத தி.மு.க. தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றப் பார்க்கிறது. தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்கள் மாதந்தோறும் ரேஷன் கடைகளில் சென்று பொருட்கள் வாங்குகின்றனர்.

ஆனால் இப்போது தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் அவர்களைப் பற்றி யோசிப்பது போல் வெளிக்காட்டுவதற்காக பணத்தை கொடுத்து ஏமாற்றப் பார்க்கிறார்கள். ஆனால் இந்த முறை மக்கள் ஏமாறமாட்டார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி மிகப் பெரிய வெற்றி அடையும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story