திமுக கூட்டணிக்கு காங்கிரஸ் எந்தவித நெருக்கடியும் கொடுக்கவில்லை: செல்வப்பெருந்தகை

பாஜக-அதிமுக கூட்டணி என்பது பொருந்தாத கூட்டணி என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
திமுக கூட்டணிக்கு காங்கிரஸ் எந்தவித நெருக்கடியும் கொடுக்கவில்லை: செல்வப்பெருந்தகை
Published on

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் திருவாரூரில் முன்னாள் மாவட்ட தலைவர் நீலன் அசோகன் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் மன்னை மதியழகன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் தாஹீர் வரவேற்றார். கூட்டத்தில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும். கடுமையான தண்டனை மூலம் தான் தவறு செய்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த முடியும்.

காங்கிரசை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணிக்கு எந்தவித நெருக்கடியும் கொடுக்கவில்லை. எங்களுக்கு எதை வேண்டுமோ அதனை கேட்டு பெறுவோம். பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி என்பது பொருந்தாத கூட்டணி. பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது ஒரு இடத்தில் கூட எடப்பாடி பழனிசாமி பெயரையோ, அ.தி.மு.க. பெயரையோ உச்சரிக்கவில்லை. அதற்கு மாறாக பா.ஜனதா கூட்டணி, என்.டி.ஏ. கூட்டணி என்று தான் கூறுகிறார்.

எங்கள் தலைவர் ராகுல்காந்தி பேசும்போது தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பெயரை உச்சரிப்பதுதான் வழக்கம். கனிமொழி எம்.பி. முகத்தில் துண்டை போட்டுக்கொண்டா ராகுல்காந்தியை போய் சந்தித்தார்? முகத்தில் துண்டை போட்டுக்கொண்டு மாறுவேடம் போட்டு, போய் பார்த்தது யார்?. துணிச்சலாக சிங்கப் பெண்ணாக இருக்கிற கனிமொழி தன்னுடைய காரில்தான் சென்றார். மாற்றுக்காரில் செல்லவில்லை.

தமிழ்நாட்டு மக்களை பாஜகவிடம் அடகு வைப்பதற்காக, முகத்தில் துண்டை போட்டுக்கொண்டு சென்றார்கள். ஆனால் எங்கள் சந்திப்பு நேர்மையான - கண்ணியமான சந்திப்பு. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com