3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட அணுகுசாலை அமைக்கும் பணி; விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட அணுகுசாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட அணுகுசாலை அமைக்கும் பணி; விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
Published on

அணுகுசாலை

அரியலூரில் இயங்கி வரும் பழைய அரசு மருத்துவமனை அருகே ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இருப்பினும் அப்பகுதியில் அணுகு சாலை அமைக்கும் பணி தற்போது வரை முடிவடையவில்லை. இதனால் இந்த வழியாக ரெயில் நிலையம் உள்ளிட்டவற்றுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

வெயில் நேரங்களில் புழுதி கிளம்புவதாலும், மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதாலும் இந்த வழியாக நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களும் அவதியடைகின்றனர். எனவே அணுகுசாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், இந்த ரெயில்வே மேம்பாலத்திற்கு கீழே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு வரும் மதுப்பிரியர்கள் குடித்துவிட்டு மதுபாட்டில்களை சாலையோரம் வீசிச்செல்கின்றனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறியதாவது:-

கடும் சிரமம்

வக்கீல் கோகுல்பாபு:- இந்த பகுதியில் அணுகுசாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் தற்போது வரை இந்த பணி முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக ரெயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மழைக்காலங்களில் இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளது. ரெயில் நிலையத்திற்கு மற்றொரு வழியிலும் செல்லலாம். ஆனால் அவ்வாறு செல்லும்போது போக்குவரத்து நெரிசல் மிகுந்து கால விரயம் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறப்பு பஸ் இயக்க வேண்டும்

அரியலூரை சேர்ந்த ஆனந்தராஜ்:- இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது குறைவு தான். ஆனால் அணுகுசாலை மேடும், பள்ளமுமாக இருப்பதால் இந்த வழியாக பயணிக்க முடியாத சூழல் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், பழைய அரசு மருத்துவமனையில் தற்போது பிரசவ வார்டும், குழந்தைகள் வார்டும் மட்டுமே இயங்கி வருவதால் பலர் இங்கு வந்துவிட்டு வருத்தத்துடன் திரும்பி செல்கின்றனர். அவர்கள் வசதிக்காக பழைய மருத்துவமனையில் இருந்து புதிய அரசு மருத்துவமனைக்கு சிறப்பு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டால் நோயாளிகளும், வயதானவர்களும் நிம்மதியடைவார்கள்.

இருள் சூழ்ந்துள்ளது

அரியலூரை சேர்ந்த சுப்பிரமணி:- 3 ஆண்டுகளாக இந்த சாலை பணி முடிவடையாமல் உள்ளது. ஒரு பக்கம் மட்டும் சாலை இருக்கிறது. மற்றொரு பக்கம் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இந்த அணுகுசாலை குண்டும், குழியுமாக உள்ளதால் பலர் அவதி அடைகின்றனர். அதோடு இரவு நேரத்தில் இந்த மேம்பாலத்தின் அடியில் இருள் சூழ்ந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அணுகு சாலையை முழுமையாக அமைக்க வேண்டும். மேலும் மேம்பாலத்தின் அடியில் மின்விளக்கு அமைத்தால் பொதுமக்களுக்கும், இந்த வழியாக பயணிப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com