“தமிழகத்தில் 2-ம் இடத்துக்குதான் போட்டி, முதல் இடத்தில் அ.தி.மு.க.” - விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி மறைமுக பதிலடி

சமீபத்தில் விஜய் அவர் பிரசாரத்தில் பேசும்போது, தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., த.வெ.க. இடையேதான் போட்டி என்று தெரிவித்து இருந்தார்.
“தமிழகத்தில் 2-ம் இடத்துக்குதான் போட்டி, முதல் இடத்தில் அ.தி.மு.க.” - விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி மறைமுக பதிலடி
Published on

கூடலூர்,

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நீலகிரி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் பிரசாரம் செய்தார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

நாட்டிலேயே ரோல் மாடல் ஆட்சி செய்வது மு.க.ஸ்டாலின் தான் என்று உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவது, ஊழல், கலெக்சன், கமிஷன் வாங்குவதில் ரோல் மாடல்தான் தி.மு.க. ஆட்சி. வாரிசு அரசியல், பொய் வாக்குறுதியிலும் ரோல் மாடல் தி.மு.க.தான். ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்கள் சுரண்டப்படுவதை நாம் அனுமதிக்கலாமா? இதற்கெல்லாம் சட்டமன்ற தேர்தலில் முடிவு கட்டுங்கள்.

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பல கட்சியில் இருந்து வந்தவர். அவர் எந்த கட்சிக்கு போகிறாரோ, அக்கட்சியின் கொள்கையை கடைப்பிடிக்கிறார். அந்த கட்சியை அவர் வளர்க்க பார்க்கவில்லை. காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளரும், அழகிரியும் ஒரு கருத்தைச் சொல்கிறார்கள். ஆனால், ராகுல் காந்தியே ஆட்சியில் பங்கு கேட்கவில்லை, நீங்களும் கேட்காதீர்கள் என செல்வப்பெருந்தகை சொல்கிறார். அவருக்கு தி.மு.க.வை தாங்கிப்பிடிக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சிக்கு அவர் விசுவாசமாக இல்லை. தி.மு.க.வுக்கு விசுவாசமாக இருக்கிறார். ஆனால், காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள் கூட்டணியில் பங்கு வேண்டும் என கோஷம் எழுப்பிவிட்டார்கள். தி.மு.க. கூட்டணியில் பிளவு ஆரம்பமாகிவிட்டது.

தேர்தல் களத்தில் முதல் இடத்தில் அ.தி.மு.க.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை கூட்டணியை நம்பி இல்லை. மக்களை நம்பியிருக்கிறது. தி.மு.க. கூட்டணியை நம்பியிருக்கிறது. அ.தி.மு.க. மக்களோடு கூட்டணி வைத்திருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தேர்தல் களத்தில் அ.தி.மு.க. முதல் இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் 2-ம் இடத்திற்குத்தான் போட்டி நடக்கிறது. இதை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் நடந்தது. தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என்கிறார் மு.க.ஸ்டாலின். ஏற்கனவே தலைகுனிந்து விட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com