

பந்தலூர்
தனியார் தேயிலை தோட்ட பகுதியில் 20 அடியில் உருவான பள்ளம் 100 அடி ஆழத்துக்கு சென்றது. இதனால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
திடீர் பள்ளம்
பந்தலூர் அருகே அத்திக்குன்னா பகுதியில் தனியார் தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென பயங்கர சத்தத்துடன் 20 அடி ஆழத்தில் பள்ளம் தோன்றியது. இதை கண்ட அப்பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவின்பேரில் ஈரோடு கனிமவியல் துறை துணை இயக்குனர் ரமேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
நிலச்சரிவு அபாயம்
இதையடுத்து நேற்று முன்தினம் கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரத்துல்லா தலைமையில் வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் பூபாலன், சுரங்கம் மற்றும் புவியியல் துறை அலுவலர் சரவணன், நீர்வள ஆதார துறை உதவி செயற் பொறியாளர் சதீஸ்குமார், பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆய்வு நடத்தினர். இந்த நிலையில் நேற்று 20 அடியில் இருந்த பள்ளம் திடீரென 100 அடிக்கு மேல் ஆழமாக சென்றது. இதனால் நிலச்சரிவு ஏற்படுமோ? என்ற அச்சத்தில் தொழிலாளர்கள் உள்ளனர். எனினும், அதனருகில் செல்ல வருவாய்த்துறையினர் தடை விதித்து உள்ளனர்.