

கள்ளக்குறிச்சி,
கடைக்கு வந்த வாடிக்கையாளரிடம் திமிராக பேசி அவர்கள் மீது சூடான டீயை கடைக்காரர் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே வடதுரைசலூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் வடதுரைசலூர் கேட் பகுதியில் டீக்கடையுடன் சேர்த்து ஒரு பேக்கரியும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அதே ஊரில் திருக்கோவில் பகுதியை சேர்ந்த சதிஷ் என்பவர் தனது நண்பர்களோடு பேக்கரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த பிரகாஷிடம் டீயை போட்டுத் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு பிரகாஷ் பணத்தை கொடுத்துவிட்டு டீயை வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்.
இதைக்கேட்ட சதிஷ் நாங்களும் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் தான். டீயைக் குடித்துவிட்டு காசு தருகிறோம் எனக்கூறியுள்ளார். இதையடுத்து சதிஷ் ஒரு தண்ணீர் பாட்டிலை கேட்டுள்ளார். அவர்களை கோவப்படுத்தும் விதமாக தண்ணீர் பாட்டிலை அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார். எதற்கு எங்களிடம் பிரச்சினை செய்கிறீர்கள் என இளைஞர்கள் கேட்டுள்ளனர்.
பின்னர், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த கடைக்காரர் சூடான டீயை சதிஷின் நண்பர் மீது ஊற்றியுள்ளார். இருவரும் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் இணைந்து இருதரப்பினரையும் அங்கிருந்து அகற்றினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.