

சென்னை,
தமிழகத்தில் இந்த சம்பவம் புதிதாக அரங்கேறவில்லை. வெள்ளைக்காரர்கள் ஆண்டபோதே இதுபோன்ற கலாசாரம் முளைவிட்டு வளரத்தொடங்கியுள்ளது.
வெள்ளைக்காரர்கள் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற கள்ளக்காதல் பிரச்சினையில் ஆளவந்தார் என்பவர், சென்னையில் உலக்கையால் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் அப்போதே, சென்னை பிராட்வேயில் பேனா கடை நடத்தி வந்தார். தனது கடைக்கு பேனா வாங்க வந்த பெண்ணுக்கு காதல் வலைவீசினார். திருமணமான அந்தப்பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டார்.
கள்ளக்காதல் பிரச்சினையில் கொலை செய்யப்பட்ட ஆளவந்தார் உடலை துண்டு-துண்டாக வெட்டி தகர பெட்டியில் வைத்து எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு தூக்கிக்கொண்டு வந்து ரெயிலில் அந்த பிணப்பெட்டியை அனுப்பிவிட்டனர்.
துண்டு-துண்டாக உடலை வெட்டும் கொடூர கலாசாரம் அப்போதிருந்து தமிழகத்தில் வளர்ந்து, இப்போது அதுபோல், நிறைய சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. கொலை செய்யப்படுபவர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக கொலையாளிகள் இந்த யுக்தியை கையாள்கிறார்கள்.
இதேபோல், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்த மருத்துவமாணவர் நாவரசு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவருடைய உடலை துண்டு-துண்டாக வெட்டி பல பார்சல்களாக பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டது. அவரது தலை நாவரசு தங்கியிருந்த விடுதிக்கு பின்புறம் உள்ள குளத்தில் வீசப்பட்டது. இந்த படுகொலை சம்பவமும் ஆளவந்தார் கொலையைப்போல பரபரப்பாக அப்போது பேசப்பட்டது.
சென்னை பூக்கடை பகுதியில் சிறுவன் ஒருவனையும் கொலை செய்து உடலை துண்டு-துண்டாக வெட்டி குப்பைத்தொட்டியில் வீசிவிட்டனர். இதுபோன்று பல கொடூர சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன. இப்போது சந்தியா கொல்லப்பட்ட சம்பவத்திலும் அவரது உடல் துண்டு-துண்டாக வெட்டப்பட்டு, 4 பார்சல்களாக கட்டப்பட்டு தனித்தனி இடத்தில் வீசப்பட்டுள்ளன.
துண்டிக்கப்பட்ட உடலின் பாகங்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை
குப்பைதொட்டியில் கண்டெடுத்த சந்தியாவின் உடலில் துண்டிக்கப்பட்ட 2 கால்களும், ஒரு கையும் டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதில், அந்த 2 கால்களும், ஒரு கையும் ஒரே உடலில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தியாவின் உடலில் வெட்டப்பட்டுள்ள மற்ற பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்படும் என்றும், டி.என்.ஏ. பரிசோதனையில் துண்டிக்கப்பட்ட உடலின் பாகங்கள் அனைத்தும் சந்தியாவின் உடலில் இருந்து வெட்டப்பட்டது தான் என்றும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.