பச்சிளம் குழந்தையை கோவில் முன்பு வீசி சென்ற கொடூர தாய்

ஆரல்வாய்மொழி அருகே கோவில் முன்பு கிடந்த பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது. அந்த குழந்தையை வீசி சென்ற கொடூர தாயை போலீசார் தேடிவருகின்றனர்.
பச்சிளம் குழந்தையை கோவில் முன்பு வீசி சென்ற கொடூர தாய்
Published on

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே கோவில் முன்பு கிடந்த பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது. அந்த குழந்தையை வீசி சென்ற கொடூர தாயை போலீசார் தேடிவருகின்றனர்.

கோவில் முன்பு பச்சிளம் குழந்தை

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடி அருகே சாலையோரம் உள்ள ஒரு கோவில் முன்பு நேற்று மதியம் 2.40 மணிக்கு பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கிடந்தது. கடும் வெயிலுக்கு இடையே அந்த குழந்தை தொடர்ந்து அழுதபடி இருந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அருகில் சென்று பார்த்த போது துண்டினால் சுற்றப்பட்ட நிலையில் குழந்தை இருந்தது. பின்னர் அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஊழியர்கள் 108 ஆம்புலன்சில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தொடர்ந்து குழந்தையை செவிலியர் பவுலின் என்பவர் மீட்டு சிகிச்சைக்காக ஆரல்வாய்மொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார்.

வீசிச்சென்ற தாய் யார்?

அங்கு செவிலியர்கள் ஜெயா மற்றும் நித்யா ஆகியோர் குழந்தையின் உடல்நிலையை பரிசோதித்தனர். தொடர்ந்து குழந்தையின் உடலை சுத்தப்படுத்தி சட்டை அணிவித்தனர். மேலும் குழந்தையை மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த குழந்தை பிறந்து ஓரிரு நாளே இருக்கலாம் என செவிலியர்கள் தெரிவித்தனர்.

குழந்தையை கோவில் முன்பு வீசிச்சென்ற கொடூர தாய் யாரென்று தெரியவில்லை. அந்த தாயை போலீசார் தேடிவருகின்றனர். முறை தவறி பிறந்ததால் குழந்தையை கோவிலில் வீசினாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடந்து வருகிறது. மேலும் கோவில் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் குழந்தையை வீசி செல்லும் காட்சி எதுவும் பதிவாகி உள்ளதா? என ஆய்வு நடந்து வருகிறது.

கோவில் முன்பு குழந்தையை வீசி சென்ற சம்பவம் ஆரல்வாய்மொழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com