ஊரடங்கு அமலில் இருந்தாலும் வேகமாக பரவுகிறது: சென்னையில் மேலும் 103 பேருக்கு கொரோனா - தமிழகத்தில் பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது

ஊரடங்கு அமலில் இருந்த போதிலும், சென்னையில் நேற்று மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
ஊரடங்கு அமலில் இருந்தாலும் வேகமாக பரவுகிறது: சென்னையில் மேலும் 103 பேருக்கு கொரோனா - தமிழகத்தில் பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது
Published on

சென்னை,

கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

எவ்வளவுதான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த போதிலும், கொரோனா பரவுவதை தடுக்க முடியவில்லை. தமிழகத்தில் நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரசால் ஏப்ரல் 1-ந்தேதி 110 பேர் பாதிக்கப்பட்டனர். இதுதான் இதுவரை அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது. இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் கொரோனா நோய்த்தொற்று தாக்கியவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று மட்டும் 121 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களில் 103 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதில் 13 பேருக்கு புதிதாக முதன்மை தொற்று ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் 1 லட்சத்து 1,874 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள், 41 பரிசோதனை மையங்களுக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதில் 97 ஆயிரத்து 908 மாதிரிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்து இருக்கிறது. மேலும் 1,908 மாதிரிகள் இன்னும் பரிசோதனை செய்யப்படவில்லை.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,058 ஆக உயர்ந்து உள்ளது.

இவர்களில் 1,392 பேர் ஆண்கள், 666 பேர் பெண்கள்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் 80 ஆண்களும், 41 பெண்களும் உள்ளனர். மருத்துவமனைகளில் 902 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 27 பேர் நேற்று சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மருத்துவமனைகளில் இருந்து இதுவரை 1,128 பேர் வீடு திரும்பி இருக்கிறார்கள்.

கொரோனா வைரசால் நேற்று புதிதாக பாதிக்கப்பட்ட 121 பேரில், சென்னையில் 7 மாத ஆண் குழந்தை உள்பட 7 குழந்தைகள் மற்றும் 96 பேரும், செங்கல்பட்டில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை உள்பட 3 குழந்தைகளும் மற்றும் 9 பேரும், கள்ளக்குறிச்சியில் ஒரு பெண் உள்பட 3 பேரும், நாமக்கல் மாவட்டத்தில் 2 பேரும், காஞ்சீபுரத்தில் ஒருவரும் அடங்குவார்கள்.

அதாவது நேற்று ஒரே நாளில் 10 குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 8 வயது சிறுவன் உள்பட 18 பேர் முதன்மை தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், 68 வயது முதியவர் ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்து இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com