

கோவில்பட்டி,
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 358 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார அரசாணை வழங்கும் நிகழ்ச்சி கோவில்பட்டியில் நடைபெற்றது.
இதில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்துகொண்டு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார அரசாணைகளை வழங்கினர். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
7.5 சதவீத உள்ஒதுக்கீடு காரணமாக அரசு பள்ளி மாணவர்கள் 313 பேர் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளனர். நீட் தேர்வு பயிற்சி பெற 28 ஆயிரத்து 150 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பாடத்திட்ட குறைப்பு, செய்முறை தேர்வு நடைபெறும் தேதிகள் இன்னும் 10 நாட்களுக்குள் அறிவிக்கப்படும். தேர்தல் ஆணையம் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவிப்பதை பொறுத்து எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.