

சென்னை,
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பொதுத்தேர்வை மாணவர்கள் நம்பிக்கையுடனும் பயமின்றியும் எழுதும் வகையில் பரீக்ஷா பே சர்ச்சா-2020 என்ற நிகழ்ச்சி மூலம் பள்ளி மாணவர்களிடம் அடுத்த மாதம் ஜனவரி 16-ந் தேதியன்று டெல்லியில் உள்ள தல்கட்டோரா அரங்கத்தில் பிரதமர் உரையாற்ற உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க, பள்ளி மாணவர்கள் தங்களின் கட்டுரைகளை இணையதள வழியில் சமர்ப்பிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டது. ஜனவரி 16-ந் தேதியன்று தல்கட்டோரா அரங்கத்தில் பிரதமர் நிகழ்த்தும் உரையாடல் அனைத்து தூர்தர்ஷன் மற்றும் வானொலி மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.
இதை பிரதமர் அலுவலக இணையதளங்கள் தவிர்த்து, தகவல் தொழில் நுட்பத்தில் நேரலை தளங்களான யூ டியூப் சேனல் ஆப் எம்.எச்.ஆர்.டி., மை கவர்ன்மென்ட்.இன், பேஸ்புக் லைவ், ஸ்வயம்பிரபா சேனல் ஆப் எம்.எச்.ஆர்.டி., ஆகியவற்றின் மூலமாகவும் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அனைத்து வகைப் பள்ளிகளும் தொலைக்காட்சி சாதனம் மற்றும் மின் இணைப்பு வசதி பெற்றுள்ள நிலையில், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகள் இந்நிகழ்ச்சியை தவறாது காணவும், கேட்கவும் தொலைக்காட்சிபெட்டி மற்றும் இதர சாதனங்களை பழுது நீக்கம் செய்தும், ஜனவரி 16-ந் தேதி முழுவதும் தொடர் மின் விநியோகம் பெறும் பொருட்டு ஜெனரேட்டர் மற்றும் இன்வெர்ட்டர் வசதிகளை செய்து கொள்வதற்காக சமக்ரா சிக்ஷாவின் திட்ட நிதியை பயன்படுத்த வேண்டும் என்றும், இந்நிகழ்ச்சி குறித்த பின்னூட்டத்தை அளிக்க வேண்டும் என்றும் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து பள்ளி மாணவ, மாணவியர்களும் தவறாது பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை காண்பது மற்றும் கேட்பது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜனவரி 16-ந் தேதி திருவள்ளுவர் தினமாகும். அன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே, பிரதமரின் உரையாடல் நிகழ்ச்சியை காண்பதற்காக விடுமுறை தினத்திலும் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் வர வேண்டிய கட்டாயம் எழுந்தது போல தகவல் பரவியது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபி குள்ளம்பாளையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 16-ந் தேதி அன்று பயமின்றி தேர்வுகளை எழுதுவது எப்படி என்பது குறித்து டெல்லியில் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். இந்த நிகழ்ச்சியை வீடியோ கான்பரன்சிங் மூலம் பார்க்க மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என்று தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளதாகவும், இந்த அறிவிப்பை திரும்ப பெறவில்லை என்றால் கல்வித்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
பிரதமர் உரையாற்றும் 16-ந் தேதி மாட்டுப்பொங்கல் அன்று தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை நாளாக உள்ளது. ஆனால் அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக ஊக்கத்தையும், ஆக்கத்தையும், நல்ல அறிவுரைகளையும் தருவதற்காக மோடி பேசுகிறார்.
அவருடைய பேச்சை மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே டி.வி., வாட்ஸ் அப், பேஸ்புக் (முகநூல்) மூலம் தெரிந்து கொள்ளலாம் என்பதே எங்கள் நோக்கமாகும். இதற்காக மாணவர்கள் விடுமுறை நாள் அன்று பள்ளிக்கு வர தேவையில்லை. பள்ளிக்கு வரும்படி மாணவர்களை தமிழக அரசு கட்டாயப்படுத்தவில்லை. மாற்று கட்சியினருக்கு அதுபோன்ற எண்ணங்கள் இருந்தால் மாற்றிக்கொள்ள வேண்டும். விடுமுறை நாட்களில் பள்ளி நடத்தும் நிலை தமிழக அரசுக்கு இல்லை. எதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு. தற்போது அந்த நிலைப்பாட்டை நாங்கள் தெளிவுபடுத்தி உள்ளோம். எனவே எதிர்க்கட்சிகள் இப்போது ஆர்ப்பாட்டம் நடத்த தேவை இல்லை.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.