அரசின் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாது: ‘நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை’ ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆவேசம்

அரசாங்கத்தின் அன்றாட பணிகளை தங்களால் மேற்கொள்ள முடியாது என்றும், தாங்கள் ஒன்றும் மக்களால் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை என்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசின் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாது: ‘நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை’ ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆவேசம்
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், கோவையை சேர்ந்த பூமிராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், கொரோனா வைரஸ் பரவல் நகரங்களில் மட்டுமல்லாமல் குக்கிராமங்களிலும் பரவிவிட்டது. அதனால் மூலைமுடுக்கெல்லாம் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

கடந்த முறை தமிழக அரசு, கிருமிநாசினி தெளித்தது. ஆனால் இம்முறை அதை செய்யவில்லை. ஊரடங்கு அமல்படுத்துவதால் மட்டும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது என்று கூறியிருந்தார்.

காற்றில் பரவும் நோய்

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், கொரோனா வைரஸ் தொற்று என்பது காற்றில் பரவும் நோய் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி விசாரணையை நீதிபதிகள் 31-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

நிதி உதவி

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஐகோர்ட்டில் கோடை விடுமுறை காலத்தில் தாக்கல் செய்யப்படும் அவசர வழக்குகளை விசாரணைக்கு ஏற்று பட்டியலிடும் பணியில் ஈடுபட்ட சீனிவாசன் என்பவர் வைரஸ் தொற்றினால் நேற்று இறந்து விட்டார். அவரது குடும்பத்துக்கு நிதி உதவி வழங்க உத்தரவிட வேண்டும் என்றார்.

அதற்கு நீதிபதிகள், எங்களுக்காக (ஐகோர்ட்டு ஊழியர்களுக்காக) நாங்களே இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. இந்த மோசமான காலகட்டத்தில் பலரது உயிர் பறிபோயுள்ளது. பிறரை போல, நாங்களும் வரிசையில் நின்று தான் அரசின் உதவிகளை பெற முடியும் என்று பதிலளித்தனர்.

அடையாள அட்டை

அப்போது வக்கீல் ஒருவர், ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவிக்கும் பலருக்கு தன்னார்வ அமைப்புகள் உணவு வழங்குகின்றன. உணவு வழங்கும் தன்னார்வலர்களுக்கு போலீசாரால் எந்த இடையூறும் ஏற்படாத வண்ணம் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க உத்தரவிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இது குறித்து பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

பிரதிநிதிகள் இல்லை

இதைத்தொடர்ந்து மற்றொரு வக்கீல், கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல பரிந்துரைகளை தங்களுக்கு (நீதிபதிகளுக்கு) அனுப்பி வைத்துள்ளேன். அவற்றை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், நீங்கள் அனுப்பிய அனைத்து பரிந்துரைகளையும் படித்து பார்த்தோம். அதை அரசு ஏற்கனவே அமல்படுத்தி வருகிறது. பொதுவாக நாங்கள் அரசாங்கத்தை நடத்தவோ, அரசாங்கத்தின் அன்றாட பணிகளை மேற்கொள்ளவோ முடியாது. அரசாங்கத்தை நடத்த நாங்கள் ஒன்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல என்று ஆவேசமாக கருத்து தெரிவித்தனர்.

தலையிட முடியும்

பின்னர், இந்த இக்கட்டான காலத்தில் அரசாங்கத்திற்கு நாங்கள் சில உதவிகள் தான் செய்ய முடியும்.

அதேநேரம் அரசாங்கத்தின் செயலில் விதிமீறல் இருந்தால், தலையிட முடியும். மற்றபடி அரசாங்கத்தை நடத்தும் மக்கள் பிரதிநிதிகள் நாங்கள் அல்ல என்று கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com