தமிழகத்தில் கர்ப்பிணிகள் உயிரிழப்பு குறைந்துள்ளது; மகளிர் ஆணைய தலைவி தகவல்

தமிழகத்தில் தாய்கேர் மையங்கள் மூலம் கர்ப்பிணி பெண்கள் உயிரிழப்பு குறைந்துள்ளது என்று தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ்.குமரி கூறினார்.
தமிழகத்தில் கர்ப்பிணிகள் உயிரிழப்பு குறைந்துள்ளது; மகளிர் ஆணைய தலைவி தகவல்
Published on

தமிழகத்தில் தாய்கேர் மையங்கள் மூலம் கர்ப்பிணி பெண்கள் உயிரிழப்பு குறைந்துள்ளது என்று தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ்.குமரி கூறினார்.

ஆய்வு கூட்டம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ்.குமரி தலைமை தாங்கினார். கலெக்டர் விஷ்ணு, போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆய்வுக்கு பின்னர் மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ்.குமரி நிருபர்களிடம் கூறியதாவது:-

உயிரிழப்பு குறைவு

நெல்லை மாவட்டத்தில் 'ஒன் ஸ்டாப் சென்டர்' எனப்படும் பெண்கள் பாதுகாப்பு மையம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. குடும்ப பெண்களுக்கு உள்ள பிரச்சினைகள் இந்த மையம் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்த மையம் மூலம் 1,000 பிரச்சினைகளை எதிர்கொண்டு குடும்ப பெண்களின் பிரச்சினைகளை சரி செய்துள்ளது. மேலும் அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளையும் வழங்கி வருகிறது.

கர்ப்பிணிகளுக்கு தாய் கேர் மூலம் ஊட்டசத்து பொருட்கள் வழங்கி வருகிறது. மேலும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கி கர்ப்பிணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதன் மூலம் கர்ப்பிணி தாய்மார்களின் உயிரிழப்பு குறைந்துள்ளது.

பெண்களுக்கு ஓய்வு

மகளிர் ஆணையத்துக்கு குழந்தை திருமணம், பாலியல் தொடர்பான மனுக்கள், முதியோர் பிரச்சினைகள் போன்ற பல்வேறு மனுக்கள் வருகிறது. குழந்தை திருமணத்தை தடுப்பதற்கான மனுக்கள் அதிகமாக வருகிறது.

10 பெண்களுக்கு மேல் வேலை செய்யும் அரசு துறை, தனியார் நிறுவனங்களில் புகார் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜவுளி கடைகளில் பெண்கள் 8 மணி நேரம் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு காலையில் அரை மணி நேரம், மாலையில் அரை மணி நேரம் ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். இதுதொடர்பாக விரைவில் நல்ல முடிவுகள் எடுக்கப்படும். முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று இதற்காக தனி அரசாணை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (ஒழுங்கு நடவடிக்கை ஆணையர்) சுகன்யா, சமூக நலஅலுவலர் தனலட்சுமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் கிருஷ்ணலீலா, 'ஒன்ஸ்டாப்' பாதுகாப்பு மைய நிர்வாக அலுவலர் பொன் முத்து, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com