

நாகர்கோவில்:
விபத்தில் இறந்ததாக கூறப்படும் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தாயார் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.
புகார் மனு
நாகர்கோவில் பள்ளத்தை அடுத்த அன்னை நகரைச் சேர்ந்த பனியம்மாள் என்பவர் தனது குடும்பத்தினருடன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது மகள் மேரி கிரிசாந்தி என்பவருக்கும், கொட்டில்பாடு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2002-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து சுமார் மூன்று ஆண்டுகள் இருவரும் வெளிநாட்டில் இருந்தனர். அங்கு இருக்கும்போது எனது மகள் வரதட்சணை ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டார். இதனால் மனமுடைந்த எனது மகள் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்து விட்டாள். வீடு கட்டும் போது அவளிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் மேலும் ரூ.3 லட்சம் கொடுத்தோம்.
கொலையா?
இந்தநிலையில் எனது மகளுடைய கணவரின் உறவினர் ஒருவருக்கு திருமணம் நடக்க உள்ளது. அதற்கு பணம் தேவைப்படுவதால் என் மகளின் எல்.ஐ.சி. முதலீட்டை அவர்கள் கைப்பற்ற திட்டமிட்டுள்ளார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் திருமணத்திற்கு ஜவுளி எடுப்பதற்காக எனது மகளை அவர்கள் கோயம்புத்தூர் அழைத்து சென்றனர். பின்னர் வரும் வழியில் கயத்தாறு அருகே விபத்து ஏற்பட்டு, எனது மகளை நெல்லை ஐகிரவுண்ட் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதாக தெரியவந்தது. பின்னர் நாங்கள் அங்கு சென்ற போது வள்ளியூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், பின்னர் நாகர்கோவிலில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவித்தனர்.
நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனைக்கு சென்றபோது தான் எனது மகள் இறந்தது எங்களுக்கு தெரிய வந்தது. அவளது கழுத்தில் காயம் இருந்தது. ஆனால் விபத்தில் சிக்கி அவள் இறந்ததாக தெரிவித்தனர். காரில் இருந்த வேறு யாருக்கும் எதுவும் ஏற்பட வில்லை. இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாமோ? என சந்தேகிக்கிறோம். எனவே இது தொடர்பாக முறையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். எனது மகளின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.