

சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முக்கிய வழித்தடங்களில் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் சாதாரண பயணியர் ரெயில்களை அதிககட்டணம் வசூலிக்கப்படும் விரைவு ரெயில்களாக மாற்றுவதற்கும் ஆணையிட்டுள்ள ரெயில்வே வாரியம், இப்போது ரெயில்களை தனியார் மயமாக்கினால், அதில் பயணம்செய்வது குறித்து ஏழைகள்-நடுத்தரமக்களால் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. இது ஏழைகளுக்கு எதிரான நடவடிக்கை ஆகும்.
அதுமட்டுமின்றி, 151 ரெயில்கள் தனியார் மயமாக்கப்படுவதால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை உருவாகும். இவை எதுவுமே ரெயில்வேத்துறையின் வளர்ச்சிக்கோ, மக்களின் முன்னேற்றத்திற்கோ வழிவகுக்காது. தனியார் நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பதற்கு மட்டும்தான் வழிவகுக்கும். ரெயில்வேத்துறையை லாபத்தில் இயக்க தனியார் மயமாக்கல் மட்டுமே ஒரேவழியல்ல. அவற்றைக்கடந்து ஏராளமான வழிகள் உள்ளன.
பா.ம.க.வை சேர்ந்தவர்கள் ரெயில்வேத்துறை இணை மந்திரிகளாக இருந்தபோது ரெயில்வேத்துறை லாபத்தில் இயங்கியது. பா.ம.க. மந்திரி பதவி விலகியபோது இந்திய ரெயில்வேத்துறையிடம் ரூ.89ஆயிரம் கோடி உபரிநிதி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வளவையும் கடந்து இந்திய வரலாற்றில் முதன்முறையாக ரெயில்கட்டணங்கள் குறைக்கப்பட்டன; இன்றுவரை அச்சாதனை முறியடிக்கப்படவில்லை.
எனவே, ரெயில்வேத்துறையை முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டிலேயே நீடிக்கச்செய்து, அதைலாபத்தில் இயக்குவதற்கான ஆக்கப்பூர்வமான வழிமுறைகளை ஆராயவேண்டும். ரெயில்சேவைகளை தனியார்மயமாக்கும் முடிவை மத்தியஅரசும், ரெயில்வேவாரியமும் கைவிடவேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
இதுபோல எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடெங்கும் மத்தியஅரசு புதிதாக அறிமுகப்படுத்த உள்ள 109 வழித்தடங்களில், மக்களின் போக்குவரத்துக்கான 151 நவீன ரெயில்களை தனியார் பெருமுதலாளிகளுக்கு தாரைவார்க்க மத்தியஅரசு தனியார் ஏலதாரர்களின் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. அரசின் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதன்வாயிலாக நாட்டின் இறையாண்மையை பெருமுதலாளிகளிடம் அடகுவைப்பதை மத்தியஅரசு தவிர்க்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.