திருவேற்காட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்

கோப்புப்படம்
மாந்தோப்பு மைதானத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
சென்னை திருவேற்காடு மாந்தோப்பு மைதானத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் முடிவு கடும் கண்டனத்திற்குரியது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட கோலடி பகுதியில் அமைந்திருக்கும் மாந்தோப்பு விளையாட்டுத் திடலில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பை மீறி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாநில மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் மைதானமாக மட்டுமல்லாமல் பொதுமக்கள் உடற்பயிற்சி மற்றும் யோகாப் பயிற்சி செய்யக்கூடிய இடமாகவும் இருக்கும் இந்த மைதானத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் தி.மு.க. அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது.
ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகள், ஏராளமான மாணவ, மாணவியர்கள் பயிலும் அரசுப்பள்ளி மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் கோலடி ஏரி என சுற்றுவட்டாரத்தில் மக்கள் பயன்பாடு அதிகமாக இருக்கும் மாந்தோப்பு மைதானத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைப்பது பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே, மாணவ, மாணவியர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களோடு சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.