இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு என்.ஆர். தனபாலன் வலியுறுத்தல்


இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்:  தமிழக அரசுக்கு என்.ஆர். தனபாலன் வலியுறுத்தல்
x

தமிழக அரசின் வரவு செலவு திட்டத்தில் அதிகபட்சமாக கல்வித்துறைக்கு மட்டுமே ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சென்னை,

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று பெருந்தலைவர்கள் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை மட்டுமே வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக தொடர்ந்து போராடும் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு முழுமையாக ஏற்று கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியில் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்ற பொய்யான வாக்குறுதியை கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் ஆட்சி முடிய இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையிலும், தொடர்ந்து போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைக்கு சிறிதும் செவி சாய்க்காமல் மவுனம் காத்து வருவது கண்டிக்கக்கூடியதாகும்.

தமிழக அரசின் வரவு செலவு திட்டத்தில் அதிகபட்சமாக கல்வித்துறைக்கு மட்டுமே ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், கல்விக்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்காமல் அரசு தொடக்க பள்ளிகளை மூடுகிற நிலையிலே வைத்துள்ளனர். கல்வி வளர்ச்சிக்கான 40 ஆயிரம் கோடி ரூபாய் என்னவாயிற்று என்பதையும் விளக்க வேண்டும்.

2021-ம் ஆண்டு தேர்தலுக்கான வாக்குறுதிகளில் 505 பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று வெறும் 10% வாக்குறுதிகளை கூட நிறைவேற்ற முடியாமல் மக்களின் எண்ணங்களை திசை திருப்புவதற்காக ஒவ்வொரு முறையும் மத்திய அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். ஆட்சியாளர்களின் பொய் வேஷம் கலையும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இன்னும் மூன்று மாதங்களில் தி.மு.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதப்படும்.

கடந்த தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை பொய்யானது என்பதை நாட்டு மக்கள் நன்கு புரிந்து கொண்டார்கள். தேர்தல் வாக்குறுதிகளை கடந்த 4 1/2 ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றாத தி.மு.க. அரசு ஆட்சி முடிய இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது போல் நாடகமாடி மக்களை ஏமாற்ற நினைப்பதை நிறுத்திவிட்டு தமிழக மக்களிடம் பகிரங்கமாக தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்த தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு கடந்த 15 நாட்களாக தொடர்ந்து போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story