கறிக்கோழி உற்பத்தி விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

அப்பாவி விவசாயிகளை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது திமுக அரசு என்று அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை,
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இயங்கி வரும் கறிக்கோழி பண்ணைகளில் கோழிகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த விவசாயிகளை, முத்தரப்புப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் அழைப்பு விடுத்து ஏமாற்றியிருக்கிறது திமுக அரசு. இதனால், வேறு வழியின்றி, தமிழகம் முழுவதும் இருந்து சென்னை வந்த சுமார் 7,000 விவசாயிகள் இன்று சென்னையில் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அவர்களைக் கைது செய்து அடக்குமுறையைக் கையாண்டிருக்கிறது திமுக அரசு.
கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள் விவசாயிகளுக்கு, உற்பத்தி கூலியாக கிலோ ஒன்றுக்கு ரூ.6.50 மட்டுமே வழங்கி வருகின்றன. உற்பத்திச் செலவு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, கிலோ ஒன்றிற்கு ரூ.20 வளர்ப்பு கூலியாக வழங்கவேண்டும் என்ற விவசாயிகளின் நெடுநாள் கோரிக்கையை பரிசீலிக்க, நிறுவனங்கள் முன்வரவில்லை. இதனால், தமிழக அரசு தலையிடக் கோரி, விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், திமுக அரசு அதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
கறிக்கோழி பண்ணை விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடியதற்காக, தமிழக விவசாயிகள் சங்க நிறுவனத்தலைவர் ஈசன் முருகசாமி உள்ளிட்ட 9 விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ள திமுக அரசு, அவர்கள் மீது மேலும் மேலும் பொய்வழக்கு பதிவு செய்து துன்புறுத்தி வருகிறது.
விவசாயிகள் நியாயமான கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுத்தால், கைது செய்து, அவர்கள் வாழ்வாதாரத்தை முடக்குவதை, திமுக அரசு வழக்கமாக வைத்திருக்கிறது. மேல்மா, மதுரை, கடலூர், கோவை என தமிழகம் முழுவதும் விவசாயிகள் மீது அடக்குமுறையைக் கையாள்கிறது. மாநிலம் முழுவதும் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற கையாலாகாமல், அப்பாவி விவசாயிகளைப் பழிவாங்கிக் கொண்டிருக்கிறது திமுக அரசு.
உடனடியாக திரு. ஈசன் முருகசாமி உள்ளிட்ட விவசாயிகள் மீது பதிந்துள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெற்று, அனைவரையும் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். கறிக்கோழி உற்பத்தி விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற, உடனடியாக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். விவசாயிகளை ஒடுக்கி ஆளும் திமுகவின் அதிகார போதை, வெகுநாள் நீடிக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






